சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த டிச., 9ஆம் தேதி தனியார் விடுதி ஒன்றில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த நசரத்பேட்டை காவல் ஆய்வாளர், சித்ராவின் கணவர் மற்றும் உறவினர்களிடம் நடத்திய விசாரணைக்குப் பின்னர், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, ஹேம்நாத்தை கைது செய்தனர்.
சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவருக்கு நிபந்தனை ஜாமீன்!
17:54 February 15
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் கடந்த டிச14ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஹேம்நாத், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் தன் மனுவில், தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க கூடாது என சித்ராவை வற்புறுத்தியதாக, அவர் நடத்தையில் சந்தேகம் கொண்டதாக தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என தெரிவித்திருந்தார்.
தனக்கும், சித்ராவுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை எனவும், எந்த குற்றமும் செய்யாத தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த மனு, நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்த போது, வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட பின்னர் மீண்டும் 13 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கு இன்று (பிப்.15) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. 60 நாட்களுக்கும் மேலாக ஹேம்நாத் சிறையில் உள்ளதால், அவரை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதை ஏற்ற நீதிபதி ஹேம்நாத்தை நிபந்தனை ஜாமினில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அவர் மதுரையில் தங்கியிருக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சித்ரா தற்கொலைக்கு காரணம் இதுதான்! - நீதிமன்றத்தில் காவல்துறை அறிக்கை தாக்கல்!