தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் தான் முழுமையான சமூக நீதியை நிலைநாட்ட முடியும்: பாமக நிறுவனர் ராமதாஸ்! - சென்னை செய்திகள்

Dr Ramadoss: சாதிவாரி கணக்கெடுப்பு முழுமையாக நடத்தப்பட்டால் தான் சமூகநீதி நிலை நிறுத்த முடியும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பை முழுமையாக நடத்தினால் தான் சமூகநீதியை நிலை நிறுத்த முடியும்
சாதிவாரி கணக்கெடுப்பை முழுமையாக நடத்தினால் தான் சமூகநீதியை நிலை நிறுத்த முடியும்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2023, 9:03 PM IST

சென்னை: தியாகராய நகரில் பாமக சார்பில் சமூகநீதி காக்க ’சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு’ என்ற தலைப்பில் இன்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அசோக் வரதன் ஷெட்டி மற்றும் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து ராமதாஸ் கூறுகையில், "இதுவரை 6 முறை சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தார்கள். அதை பின்பற்றி இருந்தால் சமூகநீதி ஒழுங்காக இருந்திருக்கும். தேசிய அளவில் ஒதுக்கப்படும் இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் முழுமையாக கிடைக்க பெறாதது சரியான தரவுகள் இல்லாததால் தான். சாதிவாரி கணக்கெடுப்பு சரியாக நடத்தப்பட்டிருந்தால் இந்தியாவில் தமிழ்நாடு பல மாநிலங்களை விட முன்னேறி இருக்கும்.

சாதிவாரி கணக்கெடுப்பு முழுமையாக நடத்தப்பட்டால் தான் சமூகநீதியை நிலை நிறுத்த முடியும் என்றார். தொடர்ந்து பேசுகையில், எந்த கட்சி ஆட்சி செய்தாலும் அதனை மறுக்கிறார்கள். கர்நாடகா, பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பின் அந்த மாநிலத்தின் வளர்ச்சியை பார்க்கிறோம். அன்புமணி சொன்னவாறு நான் முதலமைச்சரை சந்திக்கிறேன். விதை போட்டு கொண்டு தான் இருக்கிறேன்” என கூறியுள்ளார்.

இந்த கருத்தரங்களில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், "சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநில அரசு எடுக்க வேண்டும். இதைத்தான் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பல ஆண்டுகளாக கூறி வருகிறார். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் அவரது மனைவி ஜானகி, கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை பலமுறை பார்த்துவிட்டார்.

இது, ஏதோ ஒரு சாதி முன்னேற்றத்துக்காக அல்ல, தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காகவே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழ்நாடு எப்படி முன்னேறும். பெரிய பெரிய தொழிற்சாலைகளும், ஐடி வளாகங்களும், கட்டிடங்களும் கட்டினால் முன்னேறி விடுமா? முன்னேறாது.

இந்த சமூகத்தில் உண்மையாகவே பின்தங்கிய நிலையில் யார் யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்களை கைகொடுத்து மேலே தூக்கி, வேலைவாய்ப்பு, கல்வி, வீடு, சுகாதாரம் அனைத்து வழங்கினால் தான் தமிழ்நாடு முன்னேறும். தந்தை பெரியாரின், அண்ணாவின் வாரிசு நாங்கள் என்று தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பேசுகின்றன. ஆனால், அடிப்படையான சமூக நீதியைக் கொடுக்கின்ற மனம் அவர்களுக்கு இன்னும் வரவில்லை" என்று பேசினார்.

இதையும் படிங்க: பாஜகவின் தாமரை சின்னத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details