சென்னை:ஐடி விங் என்கிற வார்த்தை அரசியல் கட்சிகளிடையே பிரபலமடைந்த இந்த காலகட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு மட்டும் தான் ஐடி விங் இருக்க வேண்டுமா என்ன? குற்றங்களைத் தடுப்பதற்காகவும் குற்றங்களை கண்காணிப்பதற்காகவும், குற்றம் நடைபெறுவதற்கு முன்பாக எச்சரிக்கையை ஏற்படுத்த என சென்னை காவல் துறையின் ஐ.டி. விங் அனைத்து வகையிலும் சமூக வலைதளத்தை ஆக்கப்பூர்வமாக கையாண்டு வருகிறது.
சென்னை பெருநகர காவல் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை ஆகியவை இணைந்து வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீசாரின் சமூக வலைதளப்பிரிவு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. ஒரு கூடுதல் துணை ஆணையர், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட காவலர்கள் 24 மணி நேரமும் youtube, twitter, facebook, instagram உள்ளிட்ட சமூக வலைதளங்களைக் கண்காணித்தும் அதில் சென்னை போக்குவரத்து காவல்துறை மற்றும் சென்னை காவல் துறைக்கு உள்ள வலைதளப் பக்கங்களை கையாண்டும் வருகின்றனர்.
பொதுமக்கள் சமூக வலைதளங்களில் அளிக்கும் புகார்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பது தான் இந்தப் பிரிவின் முக்கிய நோக்கமாக உள்ளது. அந்த வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு 1,648 புகார்கள் மட்டுமே பெறப்பட்ட நிலையில், இந்தாண்டு கடந்த ஐந்து மாதங்களிலேயே 4,835 புகார்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பொதுமக்கள் அளித்துள்ளனர்.
அதில் 4,707 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக சமூக வலைதளம் மூலம் பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு நாட்களிலும், அதிகபட்சம் ஏழு நாட்களிலும் தீர்வு காணப்பட்டு புகார்கள் முடித்து வைக்கப்படுகின்றன. மேலும், பெறப்பட்ட புகார்களில் அதிகபட்சமாக போக்குவரத்து காவல்துறை சார்ந்த புகார்களே பெறப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, ஒழுங்கற்ற நம்பர் பிளேட் பொருத்திய வாகனங்கள், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்கள், சாலையை ஆக்கிரமித்து நிற்கும் வாகனங்கள், போக்குவரத்திற்கு இடையூறு நெரிசல் ஏற்படுத்தும் வகையில் உள்ள பிரச்னைகள் எனப் போக்குவரத்து தொடர்பான புகார்கள் அதிகம் பெறப்படுகின்றன.
மேலு, பொதுமக்கள் தாங்கள் அன்றாடம் நேரில் காணும் பிரச்னைகள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க தங்களின் கையில் இருக்கும் ஸ்மார்ட் போன் மூலம் புகைப்படம் எடுத்து, எந்தப் பகுதியில் குற்றம் அல்லது விதிமீறல் நடைபெறுகிறது என்பதை குறித்த குறுஞ்செய்தி அனுப்பினால் போதும், பொதுமக்கள் அளித்த புகார்களை உடனடியாக களத்தில் உள்ள போலீசாருக்கு அனுப்பி, அதனை சரி பார்த்து உண்மையாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக அபராதம் விதிப்பதும் மற்றும் நடவடிக்கை எடுப்பதனையும் போலீசார் செய்து வருகின்றனர்.