தமிழ்நாட்டில் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி அரசாணையாக வெளியிட்டது.
ஆனால் அந்த அரசாணையில் கூறப்பட்டிருந்த விதிமுறைகளை மீறி தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது.
பள்ளிக் கல்வித் துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன், விதிகளை மீறி ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் பள்ளிகள் மீது grivancesredressaltnpta@gmail.com என்ற இணையதள முகவரியில் புகார் தெரிவிக்கலாம் என செப்டம்பர் 5ஆம் தேதி அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து அரசின் விதிகளை பின்பற்றாமல் ஆன்லைன் வகுப்புகளை நீண்டநேரம் சிபிஎஸ்இ பள்ளிகள் நடத்துகின்றன என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதேபோல் ஆன்லைன் வகுப்பினால் மாணவர்களின் கண்கள் மற்றும் மனநலம் பாதிக்கப் படுவதாகவும் பெற்றோர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
சில பள்ளிகளில் ஆன்லைனில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்துகின்றனர் எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பள்ளிகள் தங்கள் குழந்தை மீது ஏதாவது நடவடிக்கை எடுத்து விடுமோ என பயந்து பெற்றோர்கள் முகவரி இன்றியும் புகார்களை தெரிவிக்கும் நிலையும் உள்ளது.
இதனைத் தொடர்ந்து விதிகளை மீறி ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் 100க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் மீது புகார்கள் வந்து குவிந்துள்ளன.
செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை 97 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அந்தப் புகார்களில் பள்ளியின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் இருந்த 57 புகார்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி விசாரணை நடத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 31 புகார்களில் தகவல்கள் முழுமையாக இல்லாததால் முழுமையான தகவல்களை அளிக்க வேண்டுமென பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. புகார் அனுப்புவது குறித்து விளக்கம் கேட்ட இரு நபர்களுக்கு விளக்கம் அளிக்கப் பட்டுள்ளன.
உயர்கல்வித் துறை சம்பந்தப்பட்ட 7 புகார்கள் உயர்கல்வித் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த புகார்களில் பெரும்பாலும் சிபிஎஸ்இ பள்ளிகளில் விதிகளை மீறி வகுப்புகள் நடத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகத்தினர், மத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதாக கூறுகின்றனர் பள்ளிக் கல்வித்துறை அலுவலர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீட் தேர்வு: தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்திலிருந்து 173 கேள்விகள்