சென்னை விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், மறுப்பவர்கள் மீது மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர் சென்னை:சென்னை விமான நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தத்தில் போதிய பணியாளர்கள் இல்லாததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் இதனை பயன்படுத்தி சில பணியாளர்கள் அங்கு கூடுதல் கட்டணம் கேட்டு வசூலிப்பதாகவும் வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.
இதற்கு மறுப்பு தெரிவிப்போருக்கு அங்குள்ள பணியாளர்கள் மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் அடுக்கு மாடி கார் பார்கிங் பகுதியில் வாகனங்களை ஒழுங்குபடுத்தவும், அங்கு வந்து செல்லும் வாகனங்களுக்கு பார்க்கிங் செய்வதற்கான கட்டண டோக்கன் வழங்கவும், வாகனங்களை பாதுகாக்கவும் ஒருவர் மட்டுமே உள்ளார்.
இந்த நிலையில், அங்கு இப்பணிகளுக்காக கூடுதலாக மற்ற யாரையும் அமர்த்தாத காரணத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனிடையே, போக்குவரத்து நெரிசலில் சிக்கி நீண்ட நேரமாக உள்ளே வருவதற்கும், விமான நிலையத்திற்கு வெளியே செல்ல காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் மீண்டும் மீண்டும் காத்திருப்பு கட்டணம் எனக் கூறி, கூடுதல் நேரத்திற்கும் சேர்த்து கட்டாய கட்டணம் வசூலித்து வருவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனிடையே, வாகனத்துடன் வெளியேறும் பகுதியில் உள்ள கட்டணம் செலுத்துமிடத்தில் வாகன ஓட்டிகளுக்கும், தனியார் கார் பார்க்கிங் உரிமையாளர்களுக்கும் இடையே மற்றொரு பக்கம் தினமும் வாக்குவாதமும் ஏற்பட்டு வருகிறது. இதனால், விமான நிலையத்திற்கும், அங்குள்ள அடுக்குமாடி சினிமா திரையரங்கிற்கும் வந்து செல்லும் பயணிகள், ஓட்டுநர்கள் மற்றும் பெண்கள் என அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் பார்க்கிங் செய்ய வசூலிக்கும் கட்டண விபரம் இத்தகையபிரச்னைகளுக்கு மத்தியில், சமீபத்தில் சென்னை விமான நிலைய கார் பார்க்கிங் பகுதியில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ஒருவேளை அங்கு கூடுதலான பணியாளர்கள் பணியாற்றினால், இந்த பெண்ணின் தற்கொலை தடுக்கப்பட்டு இருக்கலாம் என்று வாகன ஓட்டிகள் உட்பட பலரும் தெரிவிக்கின்றனர்.
மற்றொரு பகுதியில், வாகன ஓட்டிகளிடம் பேசிய ஒருவருக்கும் அங்கு வந்திருந்த பயணிக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே, விமான நிலையத்தின் கார் பார்க்கிங் பகுதியில் செக்யூரிட்டி இல்லை, திசைகாட்டி பலகை இல்லை என்பன உள்ளிட்ட எந்த விதமான வசதிகளும் இல்லை என அடுக்கடுக்காக புகார் கூறியிருக்கிறார், ஒரு பயணி.
இவைகளுக்கு எல்லாம் சேர்த்துதான் பயணிகள் அனைவரும் கட்டணம் செலுத்துவதாகவும், கட்டணத்திற்கு ஏற்ப சேவையை பெறுவது தங்களின் உரிமை எனவும், இங்கு எந்த சேவையையும் பணம் வாங்காமல் செய்வதில்லை எனவும் சென்னை விமான நிலைய நிர்வாகத்தை நோக்கி பல கேள்விகளை முன் வைத்துள்ளனர்.
அதே நேரத்தில், அப்பணியாளரிடம் அடையாள அட்டையை கேட்டபோது, அவர் தனக்கு அடையாள அட்டை இல்லை எனவும், பணிக்கு புதியதாக சேர்ந்துள்ளதாகவும் கூறினார். ஒரு பயணியை பலவிதமான சோதனைகளுக்கு விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், பணியாளராக உள்ள ஒருவரை அடையாள அட்டை இல்லாமல் எப்படி உள்ளே அனுமதித்தனர் என்றும், இங்கு பயணிகளின் உடைமைகளுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது என்றும் அப்போது வீடியோவை எடுத்துக் கொண்டு இருந்த மற்றொருவர் அவரை நோக்கி கேள்வி எழுப்பினார்.
கடந்த ஆண்டு டிசபம்பர் 22இல் பயணிகள் வசதிக்காக திறக்கப்பட்டது. இந்த சிறப்பம்சம் ரூ.250 கோடி மதிப்பீட்டில் 6 அடுக்கு மாடிகளை கொண்ட இந்த நவீன வாகன கார் பார்க்கிங் மையம் 2.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 2,150 கார்கள் வரையில் நிறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பார்க்கிங் செயல்பாடுகள் அனைத்தையும் சென்னை விமான நிலைய ஆணையம் தனியார் காண்ட்ரக்டரிடம் ஒப்படைத்ததன் அடிப்படையில், அதன் விளைவாக தற்போது பலரையும் பல இன்னல்களை காண செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க:பயன்பாட்டுக்கு வந்தது அதிநவீன கார் பார்க்கிங்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?