சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ' படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் முதல் பாடல் ‘நா ரெடி’ கடந்த 22ஆம் தேதி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், சென்னை - கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் என்பவர் நடிகர் விஜய் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், ''நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்தப் பாடலில் ”ஏ பத்தாது பாட்டில் நா குடிக்க மற்றும் பொகையல அறுவடைக்கு தயாரான” என தொடங்கும் பாடல் வரிகள் போதைப் பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் உள்ளன.
மேலும் இப்பாடல் வரிகள் ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் அமைந்திருப்பதாக'' அவர் குற்றம் சாட்டி உள்ளார். குறிப்பாக தமிழகத்தில் போதைப் பொருட்களைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருவதாகவும், தமிழகத்தில் போதைப் பொருட்களை தடுப்பதில் கடமை தவறும் அதிகாரிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை பாயும் எனவும் சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.