தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

TTF வாசன் மீது குவிந்த புகார்களும்... காவல் துறையின் பதிலும்... நடவடிக்கை பாயுமா? - அதிவேகத்தில் பைக் ஓட்டி வீடியோ பதிவு

பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் அதிவேகத்தில் பைக் ஓட்டி வீடியோ பதிவிட்டு வருவதால் சமூக வலைதளங்கள் மூலம் சென்னை காவல் துறையில் பொதுமக்கள் பலரும் புகார் அளித்தனர். இதற்கு, சம்பந்தப்பட்ட பகுதி காவல்துறையினரிடம் உரிய நடவடிக்கை எடுக்க தெரிவிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை பதிலளித்துள்ளது.

பிரபல யூடியூபர்  டிடிஎஃப் வாசனுக்கு எதிராக சென்னை காவல்துறையிடம் பொதுமக்கள் புகார்
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு எதிராக சென்னை காவல்துறையிடம் பொதுமக்கள் புகார்

By

Published : Jul 5, 2022, 8:24 AM IST

சென்னை: கடந்த சில நாள்களாக டிடிஎஃப் வாசன் என்ற யூ-ட்யூபர் குறித்து சமூக வலைதளங்களில் பெரும் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. டிடிஎஃப் வாசன், சூப்பர் பைக்குகளை பயன்படுத்தி பயணம் செய்து பல்வேறு வீடியோக்களை தனது யூ-ட்யூப் சேனல் மூலம் வெளியிட்டு வருகிறார். இவரை 28 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பாக டிடிஎஃப் வாசன் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் சந்திப்பு நடைபெற்றது. கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் காவல் துறையால் சமாளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, டிடிஎஃப் வாசனுக்கு காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்து சென்றனர்.

மேலும், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சந்திக்க முற்பட்ட நிகழ்வை டிடிஎஃப் வாசன் வீடியோவாக தனது யூ-ட்யூப் சேனலிலும் பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, யார் இந்த டிடிஎஃப் வாசன், இந்த வாலிபரை ஏன் ஆயிரக்கணக்கானோர் பின் தொடர்கின்றனர் என்று பலரும் வலைதளத்தில் தேட ஆரம்பித்தனர். இவரின் யூ-ட்யூப் வீடியோக்கள் இதுவரை பல கருத்து மோதல்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இன்றைய இளைஞர்கள் அதிகம் பின்தொடரும் நபராக டிடிஎஃப் வாசன் இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்ந்து, டிடிஎஃப் வாசன் சூப்பர் பைக்குகளை பயன்படுத்தி அதிவேகமாக செல்லும் காட்சி ஒன்றை வீடியோவாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். சுமார் 247 கிலோமீட்டர் வேகத்தில் இருசக்கர வாகனத்தை இயக்கும் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் டேக் செய்து பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். குறிப்பாக, சென்னை காவல் துறையின் சமூக வலைதளப் பக்கத்தை இணைத்து டிடிஎஃப் வாசன் பைக்கில் அதிவேகமாக செல்லும் வீடியோவையும் இணைத்து புகார் அளித்து வருகின்றனர்.

இதுபோன்ற, வீடியோ பதிவினால் இளைஞர்கள் தவறான முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு அதிவேகமாக பைக் ஓட்டுவார்கள் என பலரும் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். பைக்கில் அதிவேகமாகச் செல்லும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல்துறை சமூக வலைதளப் பக்கத்தையும் இணைத்து புகார் அளித்துள்ளனர்.

எனவே, டிடிஎஃப் வாசனையும் இவரை பின்பற்றி இதே போன்று அதிவேகமாக பைக்குகளை இயக்கி வீடியோ பதிவிடும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல்துறை சமூக வலைதளப் பக்கத்தையும், தமிழக காவல்துறை பக்கத்தையும் இணைத்து புகார் அளித்து வருகின்றனர்.

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு எதிராக சென்னை காவல்துறையிடம் பொதுமக்கள் புகார்

இதுபோன்ற செயல்களை சென்னை மாநகரத்தில் அனுமதிக்க மாட்டோம் என சென்னை காவல்துறையினர் இதற்கு பதிலளித்துள்ளனர். மாணவர்களும் இளைஞர்களும் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என சென்னை காவல்துறை சமூக வலைதளப் பக்கத்தில் அறிவுறுத்தியுள்ளது. நீங்களும் உங்கள் பாதுகாப்பும் முக்கியம் எனவும் கூறியுள்ளது. இந்த சம்பவம் நிகழ்ந்த பகுதி சென்னை காவல்துறைக்கு உட்பட்டது அல்ல எனவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட பகுதி காவல்துறையினரிடம் உரிய நடவடிக்கை எடுக்க தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை சமூக வலைதளத்தின் மூலம் பதில் அளித்துள்ளது.

ஏற்கனவே ஆபாசமாக பேசி வீடியோ பதிவிட்டு பண மோசடியில் ஈடுபட்ட பப்ஜி மதன் என்ற யூ-ட்யூபர் தொடர்பாக சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில், டிடிஎஃப் வாசன் என்ற மற்றொரு யூ-ட்யூபர் இளைஞர்களுக்குத் தவறான முன்னுதாரணமாக மாறிவிடக்கூடாது என சமூக வலைதளம் மூலம் பலரும் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:தெலங்கானாவில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: போலீசார் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details