சென்னை:கடந்த 11ம் தேதி நடிகர் விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு படம் இரண்டும் வெளியானது. இரண்டு திரைப்படங்களுக்கும் பல்வேறு திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குறிப்பாகச் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ரோகிணி திரையரங்கில் சிறப்புக் காட்சி வெளியாவதற்கு முன்பாக ரசிகர்கள் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
இதில் சென்னையில் உள்ள ரோஹிணி திரையரங்கில் பேனர்கள் கிழிக்கப்பட்டு இருவரின் ரசிகர்களும் மோதிக்கொண்டனர். பின்னர் பொலீசார் தடியடி நடத்திய பின் கலைந்து சென்றன. இந்நிலையில், பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக வந்த வாகனங்களை மறித்து வாகனங்களின் மீது ஏறி ரசிகர்கள் ஆட்டம் போட்டனர்.
அப்போது சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பரத்குமார் என்ற அஜித் ரசிகர் லாரியிலிருந்து கீழே குதிக்கும் போது படுகாயமடைந்து பலியானார். இது தொடர்பாக கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இளைஞர் மரணம் விவகாரத்தில் நடிகர் விஜய், அஜித் மற்றும் திரையரங்கு உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வகுமார் என்பவர் சென்னை காவலர் அலுவலகத்தில் இணைய வழியாக புகார் அளித்துள்ளார்.
நடிகர் அஜித் மற்றும் விஜய் மீது புகார் குறிப்பாக பெரிய நடிகர்களின் திரைப்படம் ஒரே நாளில் வெளியாகும் போது இரண்டு தரப்பு ரசிகர்கள் இடையே பல்வேறு போட்டி செயல்பாடுகளும், தகராறுகளும் எழுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இவ்வாறு இரண்டு தரப்பினரிடையே தொடர்ந்து மோதல் போக்கை ஊக்குவிக்கும் வகையிலும், கலவரம் ஏற்படும் வகையிலும், அதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருக்கும் நடிகர்கள் விஜய், அஜித் மீது அதற்குரிய இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் திரையரங்கு வளாகத்தில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகச் சென்ற கல்லூரி மாணவர் மரணம் அடைந்த விவகாரத்தில் திரையரங்கு நிர்வாகம் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளோ உரிய கட்டுப்பாடுகளையும் பின்பற்றாமல் செயல்பட்டதன் விளைவாகவே மரணம் நிகழ்ந்து இருப்பதாகவும், எனவே அஜாக்கிரதையாகச் செயல்பட்டு மரணம் விளைவித்தல் என்கிற அடிப்படையில் திரையரங்கு உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர் செல்வகுமார் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: துணிவு திரைப்படத்தின்போது அஜித் ரசிகர் மரணம் - தாயார் கமிஷனர் ஆபிஸில் புகார்!