சென்னை:பணம் பெற்றுக்கொண்டு படத்தில் நடிக்காமல் மோசடி செய்துவிட்டதாக நடிகர் யோகி பாபு மீது தயாரிப்பாளர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விருகம்பாக்கம் பகுதியில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருபவர் ஹாசிர். இவர் கடந்த 20 ஆண்டுகளாக 'ROOBY பிலிம்ஸ்' என்ற பெயரில் திரைப்பட நிறுவனம் நடத்தி வருகிறார். வண்டி, கன்னிமாடம், மங்கி டாங்கி உள்ளிட்ட பல திரைப்படங்களை இந்நிறுவனம் மூலம் தயாரித்து உள்ளார்.
இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு ஹாசிர், 'ஜாக் டேனியல்' என்ற திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்தார். இந்த திரைப்படத்தை கௌசிக் ராமலிங்கம் இயக்க, நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் காமெடி நடிகர் 'யோகி பாபு' நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். மேலும் இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் யோகி பாபுவிடம் ரூ.65 லட்சம் பேசி முன்பணமாக தொகையாக ரூ.20 லட்சம் தயாரிப்பாளர் ஹாசிர் கொடுத்தார். ரூ.5 லட்சம் பணமாகவும், ரூ.15 லட்சம் காசோலையாகவும் கொடுத்ததாக தெரியவருகிறது. இந்த நிலையில், திரைப்பட சூட்டிங் தொடங்கியதும் நடிகர் யோகி பாபுவை நடிப்பதற்காக தயாரிப்பு நிறுவனம் அழைத்தது. ஆனால், அதற்கு யோகி பாபு வராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், அளித்த பணத்தை திருப்பி தரும்படி தயாரிப்பாளர் ஹாசிர் கேட்டபோது தராமல் இழுத்தடித்து வந்ததாகவும் தெரியவருகிறது. இதையடுத்து தயாரிப்பாளர் ஹாசிர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் யோகி பாபு மீது இன்று (ஆகஸ்ட் 20ஆம் தேதி) புகார் அளித்துள்ளார். இப்புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.