சென்னை:பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த விசிக நிர்வாகி, விக்ரமண். இவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான இளம்பெண் கிருபா முனுசாமி என்பவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், ''லண்டனில் ஆராய்ச்சி படிப்பை படித்துக் கொண்டிருக்கும் நான் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்தவர். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக இருந்தேன். லண்டன் செல்லும்போது விமான நிலையத்தில் நண்பர்களுடன் கூட வழியனுப்ப வந்தபோது தான் விக்ரமன் பழக்கமானார்.
கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் என்னை காதலிப்பதாகக் கூறி நெருக்கமாக பழகிவந்தார். அதன்பின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அழைத்ததாக தன்னிடம் பொய் கூறினார். காதலிக்கும்போது சாதி ரீதியாக என்னை திட்டியுள்ளார். இருப்பினும் காதல் பிரிந்துவிடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது மன்னிப்புக் கேட்டு வந்தேன்.
நான் லண்டனில் இருக்கும்போது மூன்று முறை அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு உடல் நிலையில் பாதிக்கப்பட்டேன். இடையில் திடீரென தங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. பின்னர், கடந்த ஆண்டு தொடர்ந்து பொருளாதார ரீதியாக அவருக்கு உதவி செய்து வந்தேன். மீண்டும் பண நெருக்கடி காரணமாக விக்ரமனிடம் பணத்தை திருப்பிக்கேட்டபோது சண்டையிட்டுப் பிரிந்து சென்றார்.
பலமுறை அவருடன் பேச நினைத்தும் என்னை தவிர்த்து வந்தார். இதனால் மனரீதியாக பாதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்றேன். பின்னர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமன் நுழைந்ததை அறிந்தேன். அதன்பின் பிக் பாஸில் இருந்து வெளிவந்த பிறகு கடந்த ஜனவரி மாதம் சந்திக்கும் பொழுது மிகவும் நெருக்கமாகப் பழகினார். ''அறம் வெல்லும்'' என்ற அமைப்பை தொடங்கியதற்கு நான் உதவினேன். மீண்டும் விக்ரமனோடு கடந்த மார்ச் மாதம் சண்டை ஏற்பட்டது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் கூட விக்ரமனுக்கு தேவைப்படும் பொழுது உதவி செய்து வந்தேன்.