சென்னை:நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படப்பிடிப்பை முடித்துவிட்டு அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கும் 'லால் சலாம்' படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்த், 2016ஆம் ஆண்டு முதல் சென்னை கோடம்பாக்கம் விஸ்வநாதபுரம் மெயின் ரோட்டில், 'ரஜினிகாந்த் பவுண்டேஷன்' நடத்தி வருகிறார் . இந்த அறக்கட்டளையின் உறுப்பினர்களாக நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா, சகோதரர் சத்யநாராயண ராவ் மற்றும் முரளி பிரசாத் ராவ், ஆகியோர் இருந்து வருகின்றனர்.
இந்த அறக்கட்டளையானது வழக்கறிஞர் சத்திய குமார் என்பவர் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் பவுண்டேஷன் மூலம் விளிம்பு நிலையில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு இலவசமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி அளிப்பது, இலவச புத்தகங்கள் வழங்குவது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். மேலும் தமிழ்நாடு காவல் துறையில் சேர்வதற்காக தயாராகி வரும் ஏழ்மை நிலை மாணவர்களுக்கும் உதவி செய்து வருகின்றனர்.
ஏழை மக்கள் குறிப்பாக சினிமா துறையில் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் மருத்துவ சிகிச்சை மற்றும் கல்வி உள்ளிட்ட சேவைகளை இந்த அறக்கட்டளை மூலம் நடிகர் ரஜினிகாந்த் செய்து வருகிறார். மேலும், ரஜினிகாந்த் அறக்கட்டளையானது யாரிடமும் எப்போதும் எந்த அமைப்பிடமும் அன்பளிப்பு வாங்கியதே கிடையாது.
இந்த நிலையில் அறக்கட்டளையின் அறங்காவலராக இருந்து வரும் டி.எஸ்.சிவராமகிருஷ்ணன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், "கடந்த ஜூலை 10ஆம் தேதி ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் மகாராஷ்டிரா, மும்பையில் உள்ள பெனிசுலா டவர் பிசினஸ் பார்க் என்ற முகவரியில் அறக்கட்டளை செயல்பட்டு வருவதாகவும், நடிகர் ரஜினிகாந்த் புகைப்படத்தை பயன்படுத்தி தங்களது அறக்கட்டளையின் பெயரை தவறாக பயன்படுத்தி போலி பேஸ்புக் கணக்கை உருவாக்கி உள்ளதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
அதில் ரஜினிகாந்த் பவுண்டேஷன் நிறுவியதற்கான வெற்றியை கொண்டாடுவதற்காக லக்கி ட்ரா போட்டி நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 2000 பேர் பதிவு செய்திருப்பதாகவும், அதில் 200 பேரை தேர்ந்தெடுத்து, ரஜினிகாந்த் பவுண்டேஷன் பொருளாதார நிலையை உயர்த்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் கலந்து கொண்டவர்கள் வெற்றி பெற்றுள்ளார்களா என தெரிந்து கொள்வதற்கு 8981239363 என்ற எண்ணுக்கு அழைக்கவும் அல்லது எஸ்எம்எஸ் மூலமாகவும் வாட்ஸ் அப் மூலமாகவும் தெரிவிக்கலாம் என விளம்பரமும் செய்துள்ளனர்.