இது குறித்து மீனவ சங்கத் தலைவர் பாரதி பேசுகையில், "கடற்கரை ஒழுங்குமுறை ஆணையை பெறாமல் மெரினா கடற்கரையில் மிகப்பெரிய திட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. மெட்ரோ ரயில் திட்டம், மெரியா லூப் சாலையில் நடக்கும் கட்டுமான பணிகள், மெரினா கடற்கரையில் சென்னை மாநகராட்சி கொண்டுவர உள்ள பல்வேறு திட்டங்கள் போன்றவற்றிற்கான அறிவிப்புகள் கொடுத்துள்ளனர். இது அங்கு பாரம்பரியமாக வசித்துவரும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும். எனவே இது சம்பந்தமாக இன்று புகார் அளித்துள்ளோம்.
மேலும் 2014ஆம் ஆண்டு மெரினா லூப் சாலை போடும்போதே இது மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இருப்பதால் இதற்கு அனுமதி தரக்கூடாது என்று புகார் அளித்திருந்தோம். அதேபோல் கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணையில் உள்ளூர் மீனவ கிராமங்களை குறிப்பிட்டு ஒரு வரைபடம் தயாரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.