சென்னை: வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் தென்னிந்திய செங்குந்த மகாசன சங்கம் சார்பில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த புகாரில் திரைப்பட இயக்குநர் ஆர்.கே செல்வமணி தங்கள் சங்கத்துக்குச் சொந்தமான கட்டிடத்தில் அத்துமீறி நுழைந்ததுடன், தங்கள் சங்க நிர்வாகிகள் மீது அவதூறு கருத்துக்களை பரப்பியதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய செங்குந்த மகாசன சங்கத்தின் தலைவர் செல்வராஜ், தங்களது சங்கம் செங்குந்த முதலியார் மக்கள் நலனுக்காக செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், தங்கள் சங்கத்துக்குச் சொந்தமான செங்குந்தர் மாளிகை என்ற கட்டிடம் தற்போது தங்கும் விடுதியாக செயல்பட்டு வருவதாகவும், வெளியூரிலிருந்து வரும் தங்கள் சமுதாய மக்கள் குறைந்த கட்டணத்தில் தங்கி பயனடையும் வகையில் அது செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், தங்கள் சங்கத்துக்குச் சொந்தமான வள்ளல் சபாபதி பள்ளியும் ஹாரிங்டன் சாலையில் சமூக சிந்தனையுடன் குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கு கல்வியை புகட்டி வருவதாகவும் தெரிவித்தார்.
இயக்குநர் ஆர்.கே. செல்வமணி மீது காவல் ஆணையரிடம் புகார் - Complaint
தென்னிந்திய செங்குந்த மகாசன சங்க நிர்வாகிகள் குறித்து அவதூறு கருத்துக்கள் பரப்பி வரும் திரைப்பட இயக்குநர் ஆர்.கே செல்வமணி மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அச்சங்கம் சார்பாக காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
![இயக்குநர் ஆர்.கே. செல்வமணி மீது காவல் ஆணையரிடம் புகார் Director against complaint](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-13243542-0-13243542-1633214946995.jpg)
தொடர்ந்து பேசிய அவர், கொரோனா ஊரடங்கிற்கு முன் திரைப்பட இயக்குநர் ஆர்.கே செல்வமணி தங்கள் சங்கத்தில் உறுப்பினராக இணைந்ததாகவும், இந்நிலையில் கடந்த 29 ஆம் தேதி இயக்குநர் செல்வமணி சுமார் 25 பேருடன் தங்கள் சங்க கட்டிடத்திற்குள் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்து அங்கு வைத்து ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தியதாகவும், அங்கு அவர்கள் கலாட்டாவில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.
மேலும், அந்த சந்திப்பின்போது தங்களது சங்கம் குறித்தும் சங்க நிர்வாகிகள் குறித்தும் உண்மைக்கு புறம்பான அவதூறு கருத்துக்களை அவர் பகிர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக தங்களது நிர்வாகிகள் இந்த சங்கத்திற்கு 15 கோடி வரை நஷ்டம் ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளதையும், தங்கள் சுயநலனுக்காக தமிழக அமைச்சர்கள் பெயர்களை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதையும் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். மேலும், காலையில் சங்க கட்டிடத்தில் கலாட்டா செய்த ஆர்.கே செல்வமணி தலைமையிலான அந்த கும்பல் மதியம் தங்கள் சங்கத்துக்குச் சொந்தமான வள்ளல் சபாபதி பள்ளிக்குள்ளும் அத்துமீறி நுழைந்து பள்ளி முதல்வர் பாலசுப்பிரமணியத்தை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆர்.கே செல்வமணி சங்கத்தில் நுழைந்தவுடன் தலைவராகும் நோக்குடன் செயல்பட்டார் எனவும், அதை எதிர்த்ததால் இவ்வாறான அத்துமீறல்களில் அவர் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார். மேலும், இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபட்ட இயக்குநர் ஆர்.கே செல்வமணி உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இது குறித்து ஆர்.கே.செல்வமணியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய போது, தன் பக்கம் நியாயம் உள்ளதாகவும், எதையும் சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
TAGGED:
Complaint