சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மையைப் பராமரிக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் திடக்கழிவுகளை அகற்றுதல், சாலை மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற அழகுப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அரசு, மாநகராட்சி கட்டடங்கள், பேருந்து நிறுத்த நிழற்குடைகள், பாலங்கள் உட்பட பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு மாநகரின் அழகினை சீர்குலைக்கும் வகையிலான செயல்கள் நடந்த வண்ணமே உள்ளது.
அதுமட்டுமின்றி 200 வார்டுகளிலும் 471 பேருந்து சாலைகள் மற்றும் 34640 உட்புற சாலைகள் உள்ளன. இந்த சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ள பெயர்ப் பலகைகளில் சேதமடைந்த பெயர் பலகைகள் மற்றும் பெயர்ப் பலகை இல்லாத சாலைகள் அல்லது தெருக்களில் மாநகராட்சியின் சார்பில் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் சாலை (அ) தெருவின் பெயர், வார்டு எண், பகுதி எண், மண்டல எண், அஞ்சல் குறியீடு கூடிய பெயர்ப் பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்குப் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டு வரும் இந்த பெயர் பலகைகளில் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் போன்ற விளம்பரங்கள் செய்யக்கூடாது. தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் பாதுகாப்பு சட்டம் 1959ன் படி (Tamilnadu Open Places (Prevention of Disfigurement) Act, 1959) நகரின் பொது இடங்களில் சுவரொட்டிகள் அனுமதியின்றி விளம்பரப் பதாகைகளை அமைக்கக் கூடாது.
அதனடிப்படையில், கடந்த மாதம் 18 தேதி முதல் இந்த மாதம் 02 தேதி வரை பொது இடங்களில் சுவரொட்டிகள் மற்றும் இதர விளம்பரங்கள் மேற்கொண்ட நபர்களுக்கு ரூ.1,61,150 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் 716 புகார்கள் பதியப்பட்டுள்ளன என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அடையார் மண்டலத்தில் 20,500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்று சுவரொட்டிகளை தவிர்க்குமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் படிங்க: "அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை" - மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த காட்டு யானைகளின் கடைசி நிமிடங்கள்!