சென்னை: கோயம்பேடு அருகேயுள்ள 10.5 ஏக்கர் நிலத்தைச் சட்டத்திற்குப் புறம்பாக விற்பனை செய்ததால் (Govt Land Sale Case), அரசுக்கு 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆர்.எஸ். பாரதி முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
பின்னர் இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் அவர் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையில் ஆர்.எஸ். பாரதி நேற்று (நவம்பர் 17) முன்னிலையாகி விளக்கமளித்தார்.
ஆர்.எஸ். பாரதி செய்தியாளர் சந்திப்பு அரசுக்கு ரூ. 500 கோடி இழப்பு
பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், ஆர்.பி. உதயகுமார் ஆகிய மூவரும் கூட்டாகச் சதிசெய்து அரசின் சொத்தை விற்றனர். இதனால் ஏற்பட்ட இழப்பு குறித்து ஏற்கனவே கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாரளித்தேன். அதன்படி புகாரின் மேல் விசாரணைக்காக என்னை அழைத்திருந்தனர்.
சென்ற பிப்ரவரி 8ஆம் தேதி கோயம்பேடு அருகே அரசுக்குச் சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தை, தேர்தல் அறிவிப்பு வெளியாகவிருந்த 15 நாள்களுக்கு முன்பாக அரசுக்குப் பேரிழப்பு ஏற்படுத்தி சுய லாபத்துடன் விற்பனை செய்ய அதிமுக அரசு உத்தரவிட்டது.
சட்டப்படி அரசின் இடத்தைத் தனியாருக்கு விற்கக் கூடாது. மருத்துவமனை, உள்ளாட்சிக் கட்டடம், கல்லூரி, பள்ளி கட்டுமானத்திற்காக மட்டுமே தனியாருக்கு வழங்கலாம். ஏலத்தில் வேண்டுமானால் விற்கலாம்.
10.5 ஏக்கர் இடத்தை பாஷ்யம் நிறுவனத்திற்கு அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்துள்ளனர். பூந்தமல்லி நெடுஞ்சாலை கோயம்பேடு சந்திப்பு அருகேயுள்ள இந்த இடத்தை சதுர அடியை 12 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். அந்த இடத்தில் ஒரு சதுர அடியின் சந்தை மதிப்பு 25 ஆயிரம் ரூபாய் ஆகும். இதன் காரணமாக அரசுக்கு ரூ. 500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
விரைவில் செல்லூர் ராஜு மீது புகார்
ஓபிஎஸ்ஸின் மூன்று பிள்ளைகள் பங்குதாரர்களாக இருக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனமே, இந்த பாஷ்யம் ஆகும். அந்த நிறுவனத்தின் பெயரிலான காரைத்தான் ஓபிஎஸ் உள்பட, அவரது குடும்பத்தினர் பயன்படுத்துகின்றனர். நிலம் விற்பனை செய்ய துறையின் அமைச்சராக இருந்த ஆர்.பி. உதயகுமார் காரணமாக இருந்துள்ளார். நிலத்தை விற்பனை செய்ய ஒரே வாரத்தில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) ஒப்புதல் கிடைத்துள்ளது.
திட்டமிட்டு அரசு நிலத்தை ஆக்கிரமித்த மூன்று பேரும் குற்றவாளிகள் எனப் புகாரளித்தேன். நான் அளித்த புகாரின் ஆதாரம் தொடர்பாக இங்கு வெளிப்படையாகக் கூற முடியாது. மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைகால் தெரியாமல், பின்விளைவு தெரியாமல் அதிகம் பேசிவருகிறார். எம்ஜிஆரின் செல்லப் பிள்ளையாகவே இருந்தவர் துரைமுருகன்.
அரசியலில் நீண்ட அனுபவம்கொண்ட அவரை 'காடு வா... வா...' என அழைப்பதாக அவர் விமர்சித்துவருகிறார். இதேபோல்தான் கருணாநிதியை மூட்டைகட்டி எடுத்துவருவார்கள் என ஜெயலலிதா பேசியிருந்தார். இருப்பினும் கருணாநிதி எவ்வளவு காலம் வாழ்ந்து இறந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். செல்லூர் ராஜு வாங்கியுள்ள வணிக வளாகங்களை மதுரையில் நேற்று பார்வையிட்டேன். விரைவில் அவர் மீதும் புகார் கொடுப்பேன்" என்றார்.
இதையும் படிங்க :Bharathi Mani Passed away: 70 ஆண்டுகால பன்முக வித்தகர் பாரதி மணி காலமானார்!