தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு ரத்து: நீதிமன்ற உத்தரவின் முழு விபரம்! - சென்னை உயர்நீதிமன்றம்

ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 30, 2022, 10:56 PM IST

சென்னை:ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன் முழு விபரங்கள்.

1.லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.பொன்னி தாக்கல் செய்த அறிக்கை அடிப்படையில் முந்தைய அரசு இந்த வழக்கை கைவிடுவது என முடிவெடுத்த நிலையில், ஆட்சி மாற்றத்திற்கு பின் அந்த அரசின் முடிவை ரத்து செய்யும் அதிகாரம் இருந்தபோதிலும், அந்த முடிவை ரத்து செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

2.அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் மற்றும் திமுக-வின் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரின் புகார்களை பார்க்கும்போது டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பது தெளிவாக தெரிவதாகவும், ஆனால் அமைச்சர் என்ற முறையில் டெண்டரை பரிசீலித்து முடிவெடுத்தார் என்பது பாதிக்கப்பட்டவர்களின் புகாரோ? வழக்கோ? இல்லை என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

3.அந்த புகார்களிலும் மாநகராட்சி தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர்கள் தான் டெண்டர் வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

4.சகோதரர்களுக்கும், பினாமிகளுக்கும் டெண்டர் ஒதுக்கப்பட்டதாக கூறுவதால் மட்டும், அமைச்சர் வேலுமணியை வழக்கில் சேர்க்க முடியுமா? என்று கேள்வி எழுவதாக கூறியுள்ள நீதிபதிகள், அரசியல்வாதிகள் எல்லாம் ஊழல்வாதிகள் என்கிற பொதுகருத்து நிலவுவதாகவும், அதனடிப்படையில் ஒரு பொது கருத்தின் அடிப்படையில் அரசியல்வாதிக்கு எதிராகவோ அல்லது சாதாரண குடிமகனுக்கு எதிராகவோ வழக்கு தொடர முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

5.ஜனநாயகத்தில் அரசியல்வாதிகளை தவிர்த்துவிட முடியாது என்றும், ஆனால் அதிகாரத்தில் உள்ள அரசியல்கட்சிகள் எதிர்க்கட்சிகளை வேட்டையாட அனுமதிக்க முடியாது என்றும் உத்தரவில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

6.முந்தைய ஆட்சியில் எஸ்.பி. பொன்னி அளித்த அறிக்கையில் வழக்கை தொடர முகாந்திரம் இல்லை என தெரிவித்த நிலையில், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கங்காதர் அளித்த அறிக்கையில் வேலுமணியையும் சேர்த்து அறிக்கை அளித்துள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளனர்.

7.ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய கட்சிகளின் இசைக்கு ஏற்ப நடனமாடக்கூடிய வேலையைத்தான் காவல்துறையினர் செய்கிறார்கள் என்பது இந்த வழக்கில் தெளிவாவதாகவும், அதனால் வேலுமணிக்கு நற்சான்று வழங்குவதற்காக இந்த நீதிமன்றம் இல்லை.

8.ஆட்சி மாற்றத்திற்கு பிறகு விசாரித்த கங்காதர் நேரடியாக வழக்குப்பதிவு செய்யாமல், வேலுமணியை வழக்கில் சேர்க்கும் வகையில் ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தி அறிக்கை அளித்து, அதனடிப்படையில் உடனடியாக வழக்கு பதிவு செய்தது ஏன்? இந்த அவசரம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

9.வேலுமணிக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து முறையாக ஆரம்பகட்ட விசாரணை நடத்தி இருந்தால், இந்த வழக்குப் பதிவை நியாயப்படுத்தி இருக்க முடியும் என்று தெரிவித்துள்ள நீதிபதிகள், ஆனால் தாமாக முன்வந்து இந்த வழக்கை பதிவுசெய்யப்பட்டு இருக்கிறது என்றும், அதிலும் இந்த ஊழல் முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகளை கண்டறியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

10.சென்னை மற்றும் கோவை மாநகராட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுக்களில் டெண்டர் ஒதுக்கீடு முறை தெளிவாக விளக்கப்பட்டு உள்ளதாகவும், அதனடிப்படையில் டெண்டர் ஒதுக்கீடு, பரிசீலனை என எதிலும் வேலுமணிக்கு எந்த பங்கும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

11.அதேசமயம் முதல் தகவல் அறிகையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பொறுத்தவரையில், தற்போதைய நிலையில் விசாரிக்க உரிய முகாந்திரம் இல்லை என நீதிமன்றம் கூறவில்லை என்றும், வேலுமணிக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை எனவும் தெளிவுபடுத்தி உள்ளனர்.

12.எதிர்க்கட்சியை சேர்ந்த முன்னணி தலைவருக்கு எதிராக பழிவாங்கும் நோக்கில் ஆளும்கட்சி வழக்குப்பதிவு செய்வது எளிதானது என்றாலும், குற்ற சட்டத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். காவல்துறை அதிகாரத்தை ஒரு சாராருக்கு ஆதரவாக பயன்படுத்தும்போது நீதிமன்றத்தால் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

13.அதிகாரிகள் தவறால் முறைகேடு நடக்கவில்லை என்றும், மாறாக வேலுமணி தலையீட்டால் தான் முறைகேடு நடந்துள்ளது என்றும் லஞ்ச ஒழிப்புத் துறை நிரூபித்திருந்தால், வேலுமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுக்க எந்த தயக்கமும் இல்லை. மீண்டும் ஆரம்பகட்ட விசாரணை நடத்திருக்காமல், நேரடியாக ஏன் வழக்குப் பதிவு செய்திருக்கக் கூடாது எனவும் உத்தரவில் கேள்வி எழுப்பி உள்ளனர்.

14.வழக்கில் சமந்தபட்ட அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைக்கு முன்பே அரசிடம் அனுமதி பெற வேண்டுமெனவும், அவ்வாறு விசாரணை நடத்தும்போது வேலுமணி செல்வாக்கை செலுத்தி இருப்பது கண்டறியப்பட்டால் அவர் மீது வழக்கு பதிவு செய்திருக்கலாம் என்றும், ஆனால் அவ்வாறு செய்யாமல் வழக்குப் பதிவு செய்தது காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகம் செய்ததை காட்டுகிறது என குறிப்பிட்டு, டெண்டர் முறைகேடு வழக்கில் வேலுமணி மீதான வழக்கை மட்டும் ரத்து செய்வதாக உத்தரவிட்டுள்ளனர்.

15.அதேசமயம் வழக்கின் புலன்விசாரணை அதிகாரி தனது விசாரணையை தொடரலாம் என்றும், அதில் வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் சேகரிக்கபட்டால், குற்றப்பத்திரிகையில் அவரை சேர்க்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

சொத்து வழக்கு தள்ளுபடி :வேலுமணிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 2016, 2021ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தில் வேலுமணி தாக்கல் செய்த சொத்து கணக்குகளின் அடிப்படையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த சொத்துக்களுக்கு அவரிடம் விளக்கம் கேட்ட பிறகுதான் வழகுப்பதிவு செய்ய முடியும் என்கிற வேலுமணி தரப்பு வாதத்தை ஏற்க முடியாது என்பதால், வழக்கில் நீதிமன்றம் தலையிட எவ்வித காரணமும் இல்லை என கூறி வேலுமணி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

காவல்துறை விசாரணையில் அரசியல் மற்றும் அரசின்தலையீடு இருக்கக்கூடாது என்கிற உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த விரும்பாததால், அரசியல் கட்சியினருக்கு எதிராக தாக்கல் செய்யப்படக்கூடிய வழக்குகளில் நீதிமன்றங்கள், காவல் நிலைய உயர் அதிகாரிகள் போல செயல்பட வேண்டி உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details