சென்னை: தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அருகே காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி 2 பெண் யானைகள் மற்றும் ஆண் யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. உயிர் தப்பிய இரண்டு குட்டி யானைகளை, பாதுகாத்து காட்டுக்குள் விட நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், "தாயை இழந்து தவிக்கும் இரு யானைக் குட்டிகளையும் யானைக் கூட்டத்துடன் சேர்க்க முயற்சிக்க வேண்டும். ஒரு வேளை, அவை குட்டிகளை சேர்த்துக் கொள்ளாவிட்டால் முகாம்களில் வைத்து பராமரிக்கலாம் என்பது தான் நடைமுறை" என வாதாாடப்பட்டது.
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை:"ஏற்கனவே தாயை பிரிந்த அம்முகுட்டி என்ற யானைக்குட்டியை மீண்டும் யானை கூட்டத்துடன் சேர்க்க முயற்சித்தபோது அவை சேர்த்துக் கொள்ளவில்லை. தற்போது அந்த யானைக்குட்டி முதுமலை முகாமில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ''எலிபண்ட் விஸ்பர்ஸ்'' என்ற பெயரில் ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது" எனவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இறந்து கிடக்கும் யானைகளைச் சுற்றி யானைக்குட்டிகள் சோகத்துடன் வலம் வருவது குறித்த காட்சிகள் நீதிபதிகளுக்கு காட்டப்பட்டன. அதைப் பார்த்த நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது?:இதைத் தொடர்ந்து அரசு சிறப்பு வழக்கறிஞர் சீனிவாசன் தமிழ்நாடு வனத்துறையின் அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், "விவசாய நிலத்தில் மின் வேலி அமைத்திருந்த விவசாயி முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது" என்றார்.