சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் பிறதுறை பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத்தேர்வு, 2024ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஹால்டிக்கெட்டை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் பட்தாரி ஆசிரியர்கள், வட்டார மைய பயிற்றுநர்கள் பணியில் சேர்வதற்கு அக்டோபர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 7ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும், ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்தவர்கள், தங்களின் விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ள டிசம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் ஜனவரி 7ஆம் தேதி நடத்த உள்ள தேர்வினை 41 ஆயிரத்து 478 பேர் எழுத உள்ளனர். அவர்களுக்கான ஹால்டிக்கெட் https://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.