கருணை அடிப்படையில் வேலை: கோயில் பிரசாதமல்ல - உயர் நீதிமன்றம் கண்டனம் - கருணை அடிப்படையில் வேலை
சென்னை: கருணை அடிப்படையில் வேலை வழங்குவது என்பது கோயிலுக்கு வரும் அனைவருக்கும் வழங்கும் பிரசாதமல்ல எனச் சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கஜேந்திரன் என்பவர் மரணமடைந்ததை அடுத்து, அவரது மகள் விஜயபிரசன்னா, கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரி அந்நிறுவனத்துக்கு விண்ணப்பித்தார்.
ஆனால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயமும் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு, குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே ஒரு உறுப்பினர் இறந்து விட்டால் அந்தக் குடும்பத்துக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தனர்.
மேலும், கருணை அடிப்படையில் வேலை வழங்குவது என்பது, கோயிலுக்கு வரும் அனைவருக்கும் வழங்கப்படும் பிரசாதமோ? அறக்கொடையோ? அல்ல எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தகுதியானவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க மறுத்ததன் மூலம் ஊழியரின் குடும்பத்தை ஏழ்மை நிலைக்குத் தள்ளிவிட்டதாகக் கூறி, மூன்று மாதங்களில் விஜய பிரசன்னாவுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும் எனப் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.