சென்னை: புதுச்சேரியை சேர்ந்த மருத்துவரான ஹேமா மருத்துவ மேற்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்காக பிறப்பிடச் சான்றும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றும் கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். ஆனால், தமிழ்நாட்டின் திருக்கோவிலூரைச் சேர்ந்தவரை ஹேமா மணந்து கொண்டதால், பிறப்பிடச் சான்று மற்றும் வகுப்புச் சான்று ஆகியவற்றை வழங்குவதற்கு புதுச்சேரி வட்டாட்சியர் மறுத்துள்ளார்.
இதனை எதிர்த்து மருத்துவர் ஹேமா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில், “நாட்டில் 90 சதவீதத்தினருக்கு, பிறந்தது ஓரிடமாகவும் பணியாற்றுவது வேறிடமாகவும் இருக்கிறது. எனது கணவர் திருக்கோவிலூரைச் சேர்ந்தவராக இருந்தாலும், புதுச்சேரிதான் எனது பிறப்பிடம். அது எப்போதும் மாறாது. எனக்குத் தேவையான சான்றிதழ்கள் வழங்க உத்தரவிட வேண்டும். புதுச்சேரியில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வில் என்னை அனுமதிக்க உத்தரவிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.