மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் அவர், “கரோனா நோய் பரவல் நாளுக்கு நாள் வீரியம் அடைந்து வருகின்றது. ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு ஒரு நாளைக்கு இரண்டாயிரம் பேர் என்ற எண்ணிக்கையில் நோய் பரவல் அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக, சென்னை, அதன் அருகாமை மாவட்டங்களில் நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை அரசு குறைத்துக் காட்டுவதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
அதேபோல் கரோனா நோய் அதிகரித்து வருவதால் மருத்துவர்கள், செவிலியர்களின் பணி சுமை அதிகரித்துள்ளது. இதனால் வேறு வழியின்றி அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்பதை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.
கரோனா நோய்த் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் சென்னை மற்றும் அதன் அருகாமை மாவட்டங்கள் அல்லது கட்டுப்பாட்டு பகுதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தவேண்டும். அதிகமாகும் நோய்த் தொற்றை சமாளிக்கும் வண்ணம் சென்னை, அருகாமை மாவட்டங்களில் கரோனா சிகிச்சைகளுக்காக ஒரு லட்சம் படுக்கை வசதிகளையும், 20 ஆயிரம் தீவிர சிகிச்சை வசதிகளையும் அரசு உறுதி செய்யவேண்டும்.
கரோனா நோய் தடுப்புக்கு தேவையான டெஸ்ட் கிட், PPE கிட் போன்றவை தமிழ்நாட்டிலேயே தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.