தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சமக, புதிய தமிழகம் பொதுச்சின்னம் கேட்டு வழக்கு: நாளைக்குள் முடிவெடுக்க உத்தரவு - Madras high court

சென்னை: அனைத்து வேட்பாளர்களுக்கும் பொதுச்சின்னம் ஒதுக்குவது தொடர்பாக இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சியின் விண்ணப்பத்தை பரிசீலித்து நாளைக்குள் (மார்ச் 17) தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமக, புதிய தமிழகம் பொதுச்சின்னம் கேட்டு வழக்கு: நாளைக்குள் முடிவெடுக்க உத்தரவு
சமக, புதிய தமிழகம் பொதுச்சின்னம் கேட்டு வழக்கு: நாளைக்குள் முடிவெடுக்க உத்தரவு

By

Published : Mar 16, 2021, 2:30 PM IST

Updated : Mar 16, 2021, 3:10 PM IST

தமிழ்நாடு, புதுச்சேரியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் அனைத்து வேட்பாளர்களுக்கும் பொதுச்சின்னம் ஒதுக்கக்கோரி அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் நிரஞ்சன் ராஜகோபாலன் ஆஜராகி, பொதுச்சின்னம் கோரிய விண்ணப்பத்தில் அத்தாட்சி பெற்ற நபர் என யாரையும் குறிப்பிடவில்லை எனவும், பொதுச்சின்னம் ஒதுக்குவதற்கான தேதி முடிவடைந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஐஜேகே தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், வழக்கறிஞர் வி. வெங்கடேசன் ஆகியோர் ஆஜராகி, தேர்தல் ஆணைய விளக்கத்திற்கு மறுப்பு தெரிவித்தனர். மேலும், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் குறித்த விவரங்களுடன் வேட்புமனுத்தாக்கலுக்கு ஐந்து நாள்களுக்கு முன்பாகவே, உரிய விண்ணப்பம் அளித்தும் மார்ச் 11ஆம் தேதி மனு நிராகரிப்பட்டதாக சுட்டிக்காட்டினர். தங்கள் மனுவை முறையாக பரிசீலித்து மார்ச் 19க்குள் பொதுச்சின்னம் ஒதுக்க சட்டத்தில் இடமுள்ளதாக சுட்டிக்காட்டினர்.

வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் தேர்தல் ஆணையத்திடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதால், ஆட்டோ ரிக்‌ஷாவை ஐஜேகேவின் பொதுச்சின்னமாக ஒதுக்க வேண்டும் என்றும், அல்லது வேறொரு பொதுச்சின்னம் ஒதுக்க உத்தரவிட வேண்டுமென்றும் வாதிட்டனர். இதேபோல தங்கள் காட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் பொதுச்சின்னம் கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோரும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர்.

மூன்று வழக்குகளிலும் பொதுவான உத்தரவு பிறப்பித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, ஜனநாயக திருவிழாவில் வாக்குரிமை எவ்வளவு முக்கியமோ, அதேபோல் தேர்தலில் போட்டியிடும் உரிமை வழங்கப்பட வேண்டியதும் முக்கியம் எனத் தெரிவித்துள்ளனர். விண்ணப்பத்தில் இருந்த குறைபாடுகளை திருத்தம் செய்து சமர்ப்பிக்க விதிகள் இல்லாததால், தேர்தல் ஆணையம் எடுத்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், புதிய விண்ணப்பத்தையும் குறிப்பிட்ட தேதிக்குள் கொடுத்துவிட்டதால், அவர்களின் கோரிக்கைகள் முறையாக பரிசீலிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படி ஐஜேகே, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகியவை பொதுச்சின்னம் கோரி இன்று (மார்ச் 16) மாலைக்குள் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அவற்றை தேர்தல் ஆணையம் பரிசீலித்து நாளை (மார்ச் 17) மாலைக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டு மூன்று வழக்குகளையும் முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க...18 வயதை எட்டிய முதல் வாக்காளர்களின் வாக்கு எந்த கட்சிக்கு? - ஈடிவி பாரத் கள ஆய்வு

Last Updated : Mar 16, 2021, 3:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details