தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்கலை.களில் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க குழு - அமைச்சர் பொன்முடி - குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க குழு அமைக்கப்படும் என, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி பேட்டி
அமைச்சர் பொன்முடி பேட்டி

By

Published : Mar 18, 2023, 2:51 PM IST

சென்னை:பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் உயர் கல்வித்துறை அதிகாரிகளுடன், தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று (மார்ச் 18) ஆலோசனை நடத்தினார். கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைத்து பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், பதிவாளர்கள், அரசு பதிவர்கள் என எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்குவது குறித்தும், மாணவர்களுக்கு ஒரே மாதிரியான தேர்வு கட்டணத்தை வசூலிப்பது தொடர்பாகவும், ஒரே மாதிரியான நிர்வாகத்தை நடத்துவது பற்றியும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அனைத்து பல்கலைக்கழகங்களையும் ஒரே மாதிரியாக நிர்வகிப்பது தொடர்பாக குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது தேர்வு கட்டணம் அதிகரிக்கப்பட்டதாக கூறி, ஒரு வாரமாக போராட்டம்ட நடத்தி வருகின்றனர். அந்த மாணவர்களுக்கு பழைய தேர்வு கட்டணமே வசூலிக்கப்படும். இனி மேல் எந்த மாதிரியான கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு நியமிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு முதல் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பழைய கட்டணத்தையே செலுத்தலாம். அடுத்த ஆண்டு முதல் எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே மாதிரியான கட்டணம் நிர்ணயிக்கப்படும். பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு தேர்வு எழுத வேண்டும். அரசுக்கல்லூரிகளில் பேராசிரியர்கள், துணைப் பேராசிரியர்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு சில அரசு உதவி பெறும் பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு மாதிரியான ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே அதை களைவதற்கு ஆலோசனை நடத்தி இருக்கிறோம். டாக்டர் பட்டம் வழங்கப்படும் போது முன்கூட்டியே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு அவர்களிடம் அங்கீகாரம் பெற்று நடத்த வேண்டும். அவ்வாறு செய்தால் தான் எந்தவித சர்ச்சைகளும் எழாது" என கூறினார்.

பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் என்ற மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைத்திருக்கிறாரே, அதன் நிலை என்ன? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "ஆளுநர் விவகாரம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். இந்த ஒரு மசோதாவை மட்டும் அவர் நிறுத்தி வைக்கவில்லை. ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் ஆளுநரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. அந்த அதிகாரத்தை அவர் விட்டுக் கொடுத்து விடுவாரா?" என அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட்.. உளவியல் நிபுணர் அபிலாஷா கூறும் பகீர் காரணங்கள்!

ABOUT THE AUTHOR

...view details