சென்னை:தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது.
இதைத்தொடர்ந்து நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்வதற்காகவும், பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவற்றை சரி செய்யும் வகையிலும் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் இதையடுத்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் கடந்த ஜூலை 8ஆம் தேதி அன்று உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
அதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவத்துறைச் சிறப்பு செயலாளர் செந்தில்குமார், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, சட்டத்துறை செயலாளர் கோபிநாத், டாக்டர். ரவீந்திரநாத், ஜவஹர் நேசன், மருத்துவக் கல்வி துறை இயக்குநர் நாராயண பாபு, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழு செயலாளர் வசந்தாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து பொது மக்களிடமிருந்து 86 ஆயிரத்து 342 மனுக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலம் கருத்துகளும் பெறப்பட்டன. அந்த மனுக்களையும், மருத்துவப் படிப்பில் நீட் தேர்வு வருவதற்கு முன், நீட் தேர்வு வந்த பின் சேர்ந்த மாணவர்களின் விவரங்கள் உள்ளிட்ட தரவுகளையும் ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர், நான்கு முறை கூடி அதன் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கையை தயார் செய்தனர்.
இந்நிலையில் குழு அமைத்தற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக மாநிலத் தலைவர் கரு.நாகராஜன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருந்ததால், அறிக்கையை தயார் செய்தாலும், வெளியிட முடியாத நிலையில் குழுவினர் இருந்தனர்.
தொடர்ந்து, நீதிமன்றத்தில் இருந்த வழக்கில் ஆய்வு செய்ய குழு அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று (ஜூலை.14) ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலமையிலான குழு அறிக்கையை சமர்ப்பித்தனர்.
இதையும் படிங்க: பெண்களை இழிவுபடுத்துகிறார்கள்: நாம் தமிழர் கட்சியினர் மீது புகார்