சென்னை:தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் செய்யப்படும் ஊராட்சி ஒன்றியம் ஒரு அலகு என கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அவர்களுக்கு பணியிட மாறுதல் வழங்குதல், ஊதிய முரண்பாடுகளை களைவதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும் போது அவர் பணிபுரியும் ஒன்றியம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இடைநிலை ஆசிரியர்கள் தங்களுக்கு ஊதியம் குறைவாக இருக்கிறது என வேறு ஒன்றியத்தில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுடன் ஒப்பிட்டு முன்னுரிமை கேட்டு விண்ணப்பம் செய்து பணப் பலன்களை கோருகின்றனர். பதவி உயர்வின் போது வேறு ஒன்றியத்தில் பணியாற்றிவருடன் ஒப்பிட்டு, தங்களை விட பணியில் இளையவர் என கூறி பதவி உயர்வும் கேட்கின்றனர். இதனால் நிர்வாகத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றிய கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், குஜிலயம்பாறை ஒன்றியத்தில் 7.10.1996-இல் நியமனம் செய்யப்பட்டு, பின்னர் 7.7.1997-இல் வேடசந்தூர் ஒன்றியத்திற்கு மாறுதல் பெற்று வந்த இடைநிலை ஆசிரியர் சகாயமேரி என்பவரை இளையவராக கொண்டு, 17 ஆசிரியர்களுக்கு நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு எதிராக இரு வேறு ஒன்றியங்களில் பணியாற்றி வரும் ஆசிரியர்களை ஒப்பிட்டு, ஊதிய முரண்பாட்டினை களைந்து தவறாக ஊதியம் நிர்ணயம் செய்து உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் விதிகளுக்கு முரணாக ஊதியம் நிர்ணயம் செய்து வழங்கி உள்ளார்.