சென்னை காவல் ஆணையரகம் பிரிக்கப்பட்டு, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களாகச் செயல்பட்டுவருகிறது. தாம்பரம் காவல் ஆணையராக ரவி பணியாற்றிவருகிறார். இந்நிலையில் பள்ளிக்கரணை பகுதியில் மனைவியை கணவன் தாக்கிய சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், புகார்கூட முறையாக வாங்கவில்லை என்றும் கூறி பாதிக்கப்பட்டவர் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் நான்கு முறை சென்று புகார் கொடுத்துள்ளார்.
இதனைத் தெரிந்ததும் தாம்பரம் காவல் ஆணையர் ரவி வாக்கி டாக்கி மூலம் நடவடிக்கை எடுக்காத காவல் துறை மீது கடும் கோபத்தில் கண்டித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் வாக்கி டாக்கியில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
‘கூண்டோடு காலிபண்ணிடுவேன்’
அந்த ஆடியோவில், "கணவன் அடித்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற மனைவி, நான்கு முறை புகார் கொடுக்க வந்துசெல்கிறார். பள்ளிக்கரணை காவல் துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் முதல் ஆய்வாளர் வரை அனைவரையும் கூண்டோடு கன்னியாகுமரி, திருநெல்வேலிக்கு மாற்றிவிடுவேன்.
தனுஷ்கோடியில் போய் அலையைத்தான் எண்ணி கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளிவிடுவேன். சரியாக நடவடிக்கை எடுக்காமல் சும்மா இருக்கக் கூடாது. வெட்டித்தனமாக வேற வேலைய ஏதாவது பார்த்துக்கொண்டு இருந்தீர்கள் என்றால் அவ்வளவுதான். கூண்டோடு காலி பண்ணிவிடுவேன்.
காவல் துறையினர் எதுக்கு இருக்கீங்க
தாக்கப்பட்டது தொடர்பாக பெண் ஒருவர் புகார் கொடுக்க நான்கு முறை வருகிறார். ஒரு நடவடிக்கை எடுக்க முடியாமல் என்ன செய்றீங்க. காவல் துறை எதுக்கு அங்கே இருக்கீங்க. காவலர்கள் பொதுமக்கள் சேவகர்கள்தானே. பொதுமக்களை துன்புறுத்ததான் இருக்கிறீர்களா?