தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருவதால் காவல் துறையினர், மாநகராட்சி அலுவலர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும், சென்னையில் எப்போதுமே மக்கள் கூட்டம் அலைமோதும் இடமான கோயம்பேடு மார்க்கெட்டில் மட்டும் 38 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கோயம்பேடு மார்க்கெட்டை பூ, காய்கறி, பழங்கள் என தனித்தனியாக மாநகராட்சி அலுவலர்கள் பிரித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் வியாபாரிகள், அங்கு பணிபுரியும் நபர்கள் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்கின்றனரா என ஆய்வு செய்தனர்.
பின்னர் வியாபாரிகளை சந்தித்து, கரோனாவைத் தடுப்பது குறித்து ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து கோயம்பேடு காவல் நிலையத்தில் பணிபுரிந்த உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு பணிபுரியும் காவலர்களை சந்தித்து வியாபாரிகளை எப்படி கையாள்வது, கரோனா தொற்று பரவாமல் தடுப்பது எப்படி என்பது குறித்து அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க: கோயம்பேடு சந்தை வியாபாரிகளுக்கு கரோனா கண்டறிதல் சோதனை!