சென்னை ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றுபவர் ஞானசெல்வம் (55). இவர், அண்மையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராஜசிம்மன் நாயுடு (46) என்பவரை கைது செய்து சிறைக்கு அனுப்பினார். தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி பழகி, ரூ.25 லட்சத்தை மோசடி செய்து விட்டதாக உமாராணி என்பவர், கொடுத்த புகார் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜசிம்மன் நாயுடு மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார்.
ராஜசிம்மன் நாயுடு சிறைக்கு அனுப்பப்பட்டபோது, அவரிடம் பறிமுதல் செய்த செல்போன், 2 பவுன் நகை,ஏ.டி.எம்.கார்டு போன்றவற்றை ஆய்வாளர் ஞானசெல்வம் அபகரித்துக் கொண்டதாக நீதிமன்றத்தில் ராஜசிம்மன் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டதன்பேரில், பெண் காவல் ஆய்வாளர் ஞானசெல்வம் மீது மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.