சென்னை: வங்கக்கடலில் டிசம்பர் 2ஆம் தேதி நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (டிச.3) மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றது. தற்போது இந்த புயலானது இன்று (டிச.4) தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கரையோர பகுதிகளில் நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாகப் பல இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மண்டலம் அறிவித்திருந்தது.
அதன்படி இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மிக்ஜாம் புயலானது தற்போது சென்னைக்கு கிழக்கே 130 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால், மேலும் வடக்கு - வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தீவிரமடைய வாய்ப்புள்ளது. இந்த மிக்ஜாம் புயலானது நாளை (டிச.5) நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை பெருநகர மாவட்ட பேரிடர் மீட்புக் குழுவின் பணிகள் குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உடன் தலைமைச் செயலாளர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே சென்னை பெருநகர மாவட்ட பேரிடர் மீட்புக் குழுவினரைத் தலைமைச்செயலாளர் சிவ் தாஸ் மீனா சந்தித்தார்.