சென்னை: தலைநகர் சென்னையில் கரோனாவைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு, ரோந்துப் பணிகளில் பணியாற்றிய காவலர்களில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் கரோனா முதல் அலையில் 10 காவலர்களும், இரண்டாம் அலையில் 28 காவலர்களும் உயிரிழந்தனர்.
கடந்த மூன்று மாதங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு உதவி ஆணையர், ஒரு காவல் ஆய்வாளர், ஐந்து சிறப்பு உதவி ஆய்வாளர்கள், ஐந்து உதவி ஆய்வாளர்கள், நான்கு தலைமைக் காவலர்கள், மூன்று காவலர்கள் என மொத்தம் 19 பேர் உயிரிழந்தனர்.
அஞ்சலி செலுத்திய ஆணையர்
இந்நிலையில் உயிரிழந்த காவலர்களின் உருவப்படத்திற்கு மலர்வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கலந்துகொண்டு, மலர்வளையம் வைத்து இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உயிரிழந்த காவலர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க மரியாதை செலுத்தியது காண்போரை கண்கலங்கச் செய்தது.
கூடுதல் ஆணையர்கள் தேன்மொழி, செந்தில் குமார், கண்ணன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். கரோனாவால் உயிரிழந்த 38 காவலர்களில், இதுவரை ஐந்து காவலர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமே, அரசு நிவாரணத் தொகையாக 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கரோனாவை அகற்ற பொது மக்கள் உதவிட வேண்டும் - முதலமைச்சர் வேண்டுகோள்