தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 22, 2020, 6:23 PM IST

ETV Bharat / state

விநாயகர் சதுர்த்தி: மெரினா கடற்கரை சாலையில் காவல் ஆணையர் ஆய்வு!

சென்னை: விநாயகர் சிலைகளை கரைப்பதைத் தடுக்கும் வகையில் மெரினா கடற்கரை சாலை அருகே செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு செய்தார்.

மெரீனா கடற்கரை சாலையில் காவல் ஆணையர் ஆய்வு
மெரீனா கடற்கரை சாலையில் காவல் ஆணையர் ஆய்வு

சென்னையில் சாந்தோம் முதல் நேப்பியா் பாலம் வரையில் உள்ள பகுதியில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லக்கூடாது, மெரினா கடற்கரையில் சிலைகளை கரைக்கக் கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து, நேப்பியர் பாலம் முதல் சாந்தோம் கடற்கரை வரை காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் மெரினா கலங்கரை விளக்கம் அருகே செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சென்னை முழுவதும் 10 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசு இதற்கான வழிமுறைகளை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சென்னையில் அனைத்து இந்து அமைப்புகளுடன் சேர்ந்து ஆலோசனை நடத்தினோம். அவர்களிடம் அரசின் அனைத்து வழிமுறைகளையும் தெரிவித்துள்ளோம். அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். சென்னையில் மூன்று இடங்களில் தடையை மீறி பொதுஇடங்களில் சிலை வைக்க முயற்சி நடந்தது. அவர்களுடன் காவல் துறை பேச்சுவார்த்தை நடத்தியது. பிறகு வீட்டிற்குள்ளே சிலையை மாற்றி விட்டனர்.

சென்னையில் இதுவரை விநாயகர் சிலைகள் பறிமுதல் செய்யப்படவில்லை. வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனிநபர் மட்டுமே சிறிய விநாயகர் சிலையை கொண்டு வந்து கரைக்கலாம். நேப்பியர் பாலம் முதல் சாந்தோம் கடற்கரை பகுதிகளில் சிலைகள் கரைக்க அனுமதி இல்லை” என்றார்.

’ரவுடிகளுக்கு அனுமதி இல்லை’

தொடர்ந்து பேசிய அவர், “ சென்னைக்குள் ரவுடிகளுக்கு அனுமதி இல்லை. சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா சப்ளை அதிகமாக நடைபெறுகிறது என்று சொல்ல முடியாது. கஞ்சா விற்பனை தொடர்பாக கண்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். சென்னையின் எல்லைப் பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்ட கஞ்சாவைப் பறிமுதல் செய்துள்ளோம். கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளோம். அனைத்து காவல் துறையினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை நகருக்குள் யாரும் சட்டவிரோத செயலில் ஈடுபட முடியாத வகையில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளோம். கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருள்களையும், ரவுடியிசத்தையும் கட்டுப்படுத்தி கடும் நடவடிக்கை எடுத்துவருகிறோம்"என்றார்.

இதையும் படிங்க:பேசுவதை எல்லாம் பேசிவிட்டு மீண்டும் பிணைக் கேட்கும் எஸ்.வி.சேகர் - சமூக வலைதளங்களில் கிண்டல்!

ABOUT THE AUTHOR

...view details