சென்னைசூளை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர், விக்ரம் ஜெயின்(45). இவர் பொருட்களை வாங்கி விற்கும் கமிஷன் ஏஜென்ட் தொழில் செய்து வருகின்றார். நேற்று முன்தினம்(அக்-28)விக்ரம் தனது மனைவி சந்திராவிடம் சவுகார்பேட்டை செல்வதாகக் கூறிவிட்டு, இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் விக்ரம் செல்போனில் இருந்து வீடியோ கால் மூலம் அடையாளம் தெரியாத 3 பேர் சந்திராவை தொடர்பு கொண்டு, "உன்னுடைய கணவரை கடத்தி இருக்கிறோம். 40 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகையை கொடுத்துவிட்டு கணவரை மீட்டுச்செல்லுங்கள்'' எனத்தெரிவித்துள்ளனர்.
மேலும் கேட்ட பணத்தைத்தரவில்லை என்றால், விக்ரமை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சந்திரா உடனே இதுகுறித்து பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். குறிப்பாக, கடத்திய நபர்கள் கேட்ட 40 லட்சம் ரூபாய் பணம் தயாராக இருப்பதாக சந்திரா ஜெயினை வைத்து போலீசார் நாடகமாடி உள்ளனர்.
பின்னர் இந்தப் பணத்தை பெறுவதற்காக வீட்டிற்கு காரில் வந்த இருவரில், ஒருவரை மடக்கிப் பிடித்தனர். காரில் தப்பிச்சென்ற மற்றொருவரை பிடிப்பதற்காக அனைத்து வாகனத்தணிக்கையில் ஈடுபடும் போலீசாருக்கும் காரின் வாகன எண்ணை அனுப்பி பிடிக்க தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின்பேரில் யானைக்கவுனி பகுதியில் வாகனத்தணிக்கையில் தப்பிச்சென்ற கார் பிடிபட்டது. பிடிபட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் திருப்பத்தூரைச் சேர்ந்த அல்தாப் (41) மற்றும் குரோம்பேட்டையைச்சேர்ந்த முரளி(35) என்பது தெரியவந்தது. மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையில் சுவாரஸ்யத் தகவல் வெளியானது.
சென்னை அசோக் பில்லரில் பைனான்ஸ் கன்சல்டிங் அலுவலகம் நடத்தி வந்த சிவசுப்பிரமணியம் என்பவர், விக்ரம் ஜெயினிடம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு 50,000 கிரிப்டோகரன்சிகளை கொடுத்து விற்பனை செய்து பணமாக கொடுக்கும்படி அளித்துள்ளார். இந்த நிலையில் வாங்கிய கிரிப்டோகரன்சிகள் இருக்கும் கணக்கை சிலர், ஹேக் செய்துவிட்டதாக விக்ரம் ஜெயின், சிவசுப்பிரமணியனிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவசுப்பிரமணியன் உடனடியாக 44 லட்சம் ரூபாய் பணம் வேண்டுமென விக்ரம் ஜெயினை தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இதனால் விக்ரம் ஜெயின் தன்னைக்கடத்தியது போல் நாடகமாடி தனது சகோதரரான நேமிசந்த் ஜெயினிடம் இருந்து 40 லட்சம் ரூபாய் பணம் பறிக்குமாறு சிவசுப்பிரமணியிடம் திட்டம் வகுத்து கொடுத்துள்ளார். அவரது திட்டத்தின்படி நேற்று சிவசுப்பிரமணியன் அலுவலகத்தில் பணிபுரியக்கூடிய முரளி, அல்தாப் ஆகியோருடன் இணைந்து விக்ரம் ஜெயினை கடத்தியது போல் நாடகமாடி, விக்ரம் ஜெயினின் மனைவியிடம் 40 ரூபாய் லட்சம் கேட்டு, கொலை மிரட்டல் விடுத்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போலீசார் இவர்களை வைத்து சிவசுப்பிரமணியம் மற்றும் கடத்தப்பட்டதாக நாடகமாடிய விக்ரம் ஜெயின் ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சகோதரரிடம் பணம் பறிக்க கடத்தல் நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கோவை கார் விபத்து... என்ஐஏக்கு புதிய அலுவலகம்...