மத்திய உளவுப்பிரிவு பல்வேறு மாநிலங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக உள்துறை அமைச்சகத்துக்கு கொடுத்த தகவலின் பேரில், உள்துறை அமைச்சகம் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியது.
அதனடிப்படையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மருத்துவமனை, பல்பொருள் அங்காடிகள் (மால்) உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றால், அதை தடுத்து பாதிக்கப்பட்டவர்களை மீட்பது எப்படி என்ற ஒத்திகை நிகழ்ச்சியை நடத்த கமாண்டோ படையினர் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி முதற்கட்டமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கமாண்டோ படை துணை ஆணையர் சோலை ராஜன் தலைமையில் ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் உட்பட 35 கமாண்டோ படை வீரர்களால் இந்த ஒத்திகை நிகழ்வுநடத்தப்பட்டது. குறிப்பாக திரைப்படங்களில் வருவதைப் போல் பயங்கரவாத கைதி ஒருவர் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் காவல் துறை பாதுகாப்பில் வைத்து சிகிச்சை பெற்றுவருகிறார்.
அவரைக் காப்பாற்ற 5 தீவிரவாதிகள் கையில் துப்பாக்கியுடன் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு உள்ளே நுழைந்தனர். பின்னர் அங்கு காவலாளியாக இருந்த ஒருவரை சுட்டுவிட்டு சென்றனர். இந்த துப்பாக்கி குண்டு சத்தத்தை கேட்டு மருத்துவமனையின் வளாகத்தில் இருந்த அனைவரும் உண்மையிலேயே தீவிரவாதிகள் நுழைந்ததை போல் கத்தி கூச்சலிட்டு அங்கிருந்து ஓடினர்.
பின்னர் மருத்துவமனை உள்ளே நுழைந்த தீவிரவாதிகள் காவலாளி,செவிலியர்கள் ஆகியோரை சுட்டுவிட்டு சிகிச்சை பெற்று வரும் தீவிரவாதியின் அறைக்கு சென்றனர். அந்த அறையில் இருந்த மருத்துவர்கள் உட்பட நோயாளிகள் அனைவரையும் பிடித்து வைத்தனர். பின்னர் இத்தகவலறிந்து வந்த அதி விரைவு படையினர், கமாண்டோ படையினர் தீவிரவாதிகள் சிறைப்பிடித்து வைத்திருந்த அறைக்குள் பதுங்கியபடி சென்று, அங்கு தப்பித்து செல்ல காத்திருந்த அனைத்து தீவிரவாதியையும் கமாண்டோ படையினர் நிஜத்தில் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துவது போல் சுட்டு கொன்றனர்.
கமாண்டோ படையினரின் தீவிரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி அதனைத் தொடர்ந்து, பணையக் கைதிகளாக வைத்திருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், பணிபுரிபவர்களை கமாண்டோ படையினர் துரிதமாக செயல்பட்டு அவர்களை மீட்டு மருத்துவமனையை விட்டு வெளியே அழைத்து சென்றனர். பின் தீவிரவாதியை துப்பாக்கி முனையில் கமாண்டோ படையினர் ஆம்புலன்சில் சிறைக்கு அழைத்து சென்றனர்.இந்த ஒத்திகை நிகழ்ச்சியை கமாண்டோ படையினர் தத்ரூபமாக நடத்தி காட்டியதால், பொதுமக்கள் சிறிது நேரம் உண்மையில் தீவிரவாதிகள் என கூச்சலிட்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து: லைக்கா நிறுவனம் மீது வழக்குப்பதிவு!