கரோனா வைரஸ் தடுப்பு ஊசிகள் தமிழ்நாட்டிற்கு வரும்போது அவற்றை சேமிக்க ஏற்பாடு செய்துள்ள வசதிகள் குறித்து சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பெரியமேட்டில் உள்ள மத்திய மருந்து பகுப்பாய்வு ஆய்வகத்தில் இருக்கும் குளிர்சாதன வசதியை ஆய்வு செய்தார்.
மத்திய மருந்து பகுப்பாய்வு ஆய்வகத்திலிருந்து தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரி லட்சத்தீவு ஆகிய மாநிலங்களுக்கு மருந்துகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
தடுப்பூசி கிடங்கில் உள்ள வசதிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ’தடுப்பூசி வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எந்தவித சுணக்கமுமின்றி செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகின்றன
தடுப்பூசி போடுவதற்கு ஏற்கனவே ஐந்து மாவட்டங்களில் 17 இடங்களில் ஒத்திகை செய்யப்பட்டது. அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வரும் எட்டாம் தேதி தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படவுள்ளது. அப்போது ஒருவருக்கு தடுப்பூசி போடுவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் அனைத்தும் செய்து பார்க்கப்படும்.