தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய கடந்த ஜனவரி 2012ஆம் ஆண்டு நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், திரைபடங்களுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக பாகுபாடு காட்டபட்டு வருவதாகக் கூறி ரெட் ஜெயிண்ட் மூவிஸ் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களது நிறுவனம் தயாரித்த படங்களுக்கு வரி விலக்கு கோரி ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுக வேண்டிய சூழல் உள்ளதாகவும், மனுதாரரின் நிறுவனம் உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமானது என்பதால் மட்டுமே வரி விலக்கு அளிப்பதில் வேண்டுமென்றே பாகுபாடு காட்டபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வணிக வரி துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் எந்த குறிப்பிட்ட குற்றசாட்டையும் கூறாமல் நிபுணர் குழுவின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளதாகத் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்தக் குழுவில் ஆளும் கட்சிகளுக்கு வேண்டப்பட்டவர்கள் மட்டுமே பெரும்பாலும் இடம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.