தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணிப்பூர் விவகாரம்: சென்னை மீனம்பாக்கத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்! - Meenambakkam Railway

மணிப்பூர் மாநிலத்தில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூர சம்பவத்தை கண்டித்து சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில், தனியார் கல்லூரி மாணவர்கள் மின்சார ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Etv Bharat ரயில் மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்
Etv Bharat ரயில் மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்

By

Published : Jul 21, 2023, 4:26 PM IST

ரயில் மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்

சென்னை:மணிப்பூரில் 2 மாதங்களுக்கும் மேலாக கலவரம் வெடித்து வருகிறது. அதில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு தேசிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த கொடூரச் செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனாலும், இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி, அப்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்ற்னர். அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்சி மற்றும் கட்சி சாரா அமைப்புகள் சாலை மறியல் ஆர்ப்பாட்டங்களை நடத்தி தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்ப்பட்டோர் மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து தண்டவாலத்தில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கடற்கரையிலிருந்து அரக்கோணம் சென்ற மின்சார ரயிலை மறித்த மாணவர்கள், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிப்பூர் கலவரத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட நிகழ்வுகளை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக கலவரத்தை நிறுத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டு இருக்கிறது.

ஆனால், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால், ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

பின்னர், ரயில்வே காவல் துறையினர் மற்றும் மீனம்பாக்கம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தைக்கு உடன்படாத மாணவர்கள் தொடர்ந்து தங்களது ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதனையடுத்து, மாணவர்களை காவல் துறையினர் குண்டு கட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதையடுத்து சுமார் 20 நிமிடத்திற்கு பிறகு மின்சார ரயில் வழக்கம் போல் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து கல்லூரி மாணவர்களிடம் ரயில்வே காவல் துறையினர் மற்றும் மீனம்பாக்கம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:"நாட்டை காப்பாற்றினேன், மனைவியை காப்பாற்ற இயலவில்லை": மணிப்பூர் பெண்ணின் கணவர் கதறல்!

ABOUT THE AUTHOR

...view details