சென்னை:கோயம்பேடு ஜெய் நகர் பார்க் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை ஒரு வாலிபர் திருடியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்ப முயன்ற அந்நபரை பார்த்த பொதுமக்கள், அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். மேலும் வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், அவரை கோயம்பேடு காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து பிடிபட்ட வாலிபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏழ்மையால் சொகுசுக்கு ஏங்கிய நேரம்: பிடிபட்ட நபர், சென்னை புழல் காவாங்கரை பன்னீர் செல்வம் பகுதியைச் சேர்ந்த ஜெபஸ்டின் (எ) டேனியல் (20). ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த டேனியல், மாதவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
அப்போது டேனியலின் நண்பர் ஒருவர் செயின், செல்போன் மற்றும் பைக் திருட்டில் ஈடுபட்டு அதன் மூலம் ஐபோன், விதவிதமான ஆடைகள், விலையுயர்ந்த பைக் என சொகுசாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் தானும் இதுபோன்று சொகுசாக வாழ வேண்டும் என்று டேனியல் எண்ணியுள்ளார்.
இதற்கு அந்த நண்பரும் ஒத்துழைத்துள்ளார். இதனால் இருவரும் சேர்ந்து செயின் பறிப்பு, பைக் திருட்டு மற்றும் செல்போன் பறிமுதல் போன்ற திருட்டு செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.