சென்னை ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கல்லூரி, பள்ளி மாணவிகளிடம் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக ரயில்வே காவல்துறை, மாநகர காவல்துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. திருட்டு சம்பவம் தொடர்பாக, ஏற்கனவே ரயில்வே காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாம்பலம் ரயில் நிலையத்தில் 4 கிராம் தங்க வளையல், கிரெடிட் கார்டுடன் தனது கைப்பை திருடு போய்விட்டதாகவும், அவருடன் பயணம் செய்த பெண் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் ரயில்வே காவல்துறைக்கு வினோதினி(18) என்ற மாணவி புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், திருட்டில் ஈடுப்பட்டு வந்த பெண் சென்னை குளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகள் மோகன பிரியா(21) என்பதும், அவர் சென்னையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் இரண்டாமாண்டு பேஷன் டெக்னாலஜி படித்து வருவதும் தெரியவந்தது.
மேலும், அவரிடம் ரயில்வே கவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆறு மாதத்திற்கு முன்பே இவர் ரயில் நிலையத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர். கல்லூரி மாணவி என்பதால் அவரது வாழ்க்கையை கருத்தில் கொண்டு காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இருந்தும், மோகன பிரியா தவறை திருத்திக் கொள்ளாமல், சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக பெற்றோர் பேச்சையும் மீறி தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து மோகன பிரியாவை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்த 4 சவரன் நகையை மீட்டு புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:உணவில் மயக்கமருந்து கலந்து பணம் நகைகள் கொள்ளை! - சமையல்காரர் கைது!