தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணத்தில் டான்ஸ் ஆடிய இளைஞர் மயங்கி விழுந்து பலி.. சென்னையில் நடந்தது என்ன? - சத்ய சாய் ரெட்டி

சென்னையில் பொறியியல் படித்து வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் சென்னையில் நடந்த திருமண விழாவில் நடனமாடிய போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

college student fainted and died while dancing at a wedding ceremony in Chennai
சென்னையில் திருமண விழாவில் நடனமாடிய கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து பலி

By

Published : Mar 27, 2023, 10:44 AM IST

Updated : Mar 27, 2023, 2:32 PM IST

சென்னை: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் சத்ய சாய் ரெட்டி(21). இவர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள விடுதியில் தங்கி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ நான்காம் ஆண்டு படித்து வந்தார். சத்ய சாயாயின் தோழியான பூனம் என்பவரின் சகோதரியின் திருமண நிகழ்ச்சி நேற்று மாலை கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

ஆடல் பாடல் என களைக்கட்டிய நிகழ்வின் இடையே மதிய உணவு பரிமாறப்பட்டுள்ளது. அதன் பிறகு டிஜே இசை ஒலித்ததும், சத்ய சாய் தனது நண்பர்களோடு சேர்ந்து நடனம் ஆடியுள்ளார். பின்னர் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு, மணமக்களோடு சேர்ந்து புகைப்படம் எடுக்க சத்ய சாய் மேடைக்கு ஏறியப்போது சுருண்டு விழுந்தார்.

இதில் லேசான காயமடைந்த சத்ய சாயை அவரது நண்பர்கள் உடனடியாக மீட்டு திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது சத்ய சாயை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் உணவு அருந்திவிட்டு நடனம் ஆடியதால் உணவு செறிமானம் ஆகாமல் மூச்சுகுழாயில் அடைப்பு ஏற்பட்டு வலிப்பு வந்து உயிர் இழந்து இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு சி.எம்.பி.டி போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் அவர்கள் சத்ய சாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சத்ய சாய் இறப்பிற்கான முழு காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கடந்த மாதம் தெலங்கானாவில், ஒரு திருமண விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. தொடரும் இளம்வயதினரின் மரணங்கள் பற்றி பலரும் பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வரும் நிலையில், தற்போது திருமண விழாவில் பங்கேற்ற கல்லூரி மாணவரின் திடீர் உயிர் இழப்பும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்காவில் சீக்கிய குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு! என்ன நடந்தது?

Last Updated : Mar 27, 2023, 2:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details