சென்னை: இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றின் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை இன்று (ஜூலை. 26) தொடங்கியுள்ளது. அதில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது; இது கண்டிக்கத்தக்கது.
தகவல் இடம்பெறவில்லை
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான விவர குறிப்பிலும், தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விவர குறிப்பிலும், மாணவர்கள் சேர்க்கையில் நடைமுறைப்படுத்தப்படும் இட ஒதுக்கீட்டு முறை குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை.
இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது அநீதி
ஒவ்வொரு இட ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்குமான தகுதி மதிப்பெண் குறித்த விவரங்களிலும் வன்னியர் உள் இட ஒதுக்கீட்டு பிரிவு குறித்து குறிப்பிடப்படவில்லை. ஆன்லைன் விண்ணப்பத்திலும் வன்னியர் உள் இட ஒதுக்கீட்டு பிரிவு இடம் பெறவில்லை. இவையெல்லாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிந்து நடைபெறுகிறதா? என்பது தெரியவில்லை. எப்படியாயினும் வன்னியர் இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது அநீதி; ஏற்க முடியாது.
தமிழ்நாடு அறிந்த வரலாறு
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் காலம் காலமாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய பங்கை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் கடந்த 42 ஆண்டுகளாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். 1980-ஆம் ஆண்டில் தொடங்கி 1989-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் நடத்தப்பட்ட போராட்டத்தின் பயனாக, 108 சாதிகளைக் கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய பிரிவை உருவாக்கி 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி வன்னியர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இது ஒட்டுமொத்த தமிழ்நாடு அறிந்த வரலாறு.
ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு அரசாணை
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டிலும் வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்காததால் தான், வன்னியர்களுக்கு மட்டும் தனி இட ஒதுக்கீடு கோரி கடந்த ஆண்டு பிற்பகுதியில் தொடங்கி, இந்த ஆண்டின் தொடக்கம் வரை 6 கட்ட போராட்டங்களை வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் நடத்தின. அதன் பயனாகத் தான் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அப்போதைய அரசு கொண்டு வந்து நிறைவேற்றியது. அந்தச் சட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டது. அதில் வன்னியர் 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு பிப்ரவரி 26ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்து விட்டதாக தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த வகையில் நியாயம்?
அதுமட்டுமின்றி, வன்னியர் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டு சட்டத்தை செயல்படுத்தும்படி அனைத்துத் துறைகளுக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சகம் கடந்த மார்ச் 2ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளது. அதைப் பின்பற்றி சட்டப்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கையில் வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் உயர்கல்வித் துறையின் பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மட்டும் வன்னியர் 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது எந்த வகையில் நியாயம்?