சென்னை:அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி பி.ஏ. முதலாம் ஆண்டு படித்துவந்தார். இவர் நேற்று (டிசம்பர் 1) தனது தாத்தா வீட்டிற்குச் சென்று குளித்துவிட்டு வருவதாகச் சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் மாணவி வீடு திரும்பாத காரணத்தினால் அவரது பெற்றோர் கதவை உடைத்துச் சென்றுபார்த்த போது மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து மாணவியின் செல்போனை பெற்றோர் ஆய்வுசெய்தபோது அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம் (18) என்ற கல்லூரி மாணவருடன், மாணவி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இருந்தது. மேலும் இருவரும் காதலித்துவந்ததும், அதன்பிறகு ஸ்ரீராம் வேறு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அனுப்பி மாணவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறப்படுகிறது.
மேலும் தற்கொலைக்கு முன்பு தனது சாவுக்கு ஸ்ரீராம் தான் காரணம் எனக் குறுந்தகவல் அனுப்பிவிட்டு மாணவி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் உறவினர்கள் கொடுத்த புகாரின்பேரில் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.