தங்கம் உருக்கும் பட்டறைக்கு வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சீல்:சென்னை பிராட்வேயில் உள்ள என்.எஸ்.சி.போஸ் சாலையில் இயங்கிவந்த நகை உருக்கும் பட்டறை ஒன்றில், கடத்தல் தங்கம் உருக்கபடுவதாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, நகை உருக்கும் பட்டறையில் சோதனை செய்தனர்.
அப்போது அந்த பட்டறையில், தங்கக்கட்டிகள் இருப்பதை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதைத் தொடர்ந்து, கண்டுபிடிக்கபட்ட தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களை விசாரித்ததில், கடத்தல் கும்பல் கொடுத்தது எனத் தெரியவந்ததாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் 4 பைகளில் இருந்த தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பட்டறையில் இருந்த 5 பேரையும் தியாகராயர் நகரில் உள்ள வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
2 ஆயிரத்து 200 கிலோ குட்கா மற்றும் 23 லட்சம் பணம் பறிமுதல்:சென்னை ஆர்.கே.நகர் பகுதிக்கு உட்பட்ட எழில் நகர் மேம்பாலம் அருகே, ஆர்.கே.நகர் போலீசார் நேற்றிரவு (அக்.13) வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் அருணாச்சலம் மற்றும் ஜோசப் ஆகிய இருவரும் மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், கூல் லிப் போன்ற போதைப்பொருட்களை கடத்தி வந்துள்ளனர்.
இதைக் கண்ட போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில், இதற்கெல்லாம் ஏஜெண்ட் குலாம் மொய்தீன் தான் காரணம் என தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து அவரை அம்பத்தூரில் பிடித்த போலீசார், அவர் மூலமாக மொத்த குடோனிற்கு அதிரடியாக சென்று, சுமார் 2 ஆயிரத்து 200 கிலோ குட்கா மற்றும் 23 லட்சம் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட மொத்த பொருட்களின் மதிப்பானது 18 லட்சம் வரை இருக்கக்கூடும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.