சென்னை:கடந்த ஜூலை 11 ஆம் தேதி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை, சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்புகளுக்கு மாற்றக்கோரி முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, இச்சம்பவம் தொடர்பான மூன்று வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்ற இருப்பதாக டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கின் விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், வழக்கின் விசாரணையை செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.
இந்நிலையில் வழக்கின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும், விசாரணையை துரிதப்படுத்துமாறும் சிபிசிஐடிக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி சி.வி.சண்முகம் கூடுதல் மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று (செப் 13) விசாரணைக்கு வந்தது.