தமிழ்நாடு அரசு கறுப்பு பூஞ்சை நோயை அறிவிக்கப்பட்ட நோயாக பட்டியலிட்டுள்ளது. அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக கண் மருத்துவர்கள், தொற்று நோய் நிபுணர்கள், நுண்ணிய இயல் நிபுணர்கள் அடங்கிய குழுவை அரசு உருவாக்கியுள்ளது. இந்தக் குழு, கருப்பு பூஞ்சை பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்து, அந்த நோயை எப்படி கட்டுப்படுத்த வேண்டுமென அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
இந்த குழுவினருடன், சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில்,கறுப்பு பூஞ்சை நோய்த் தொற்றை எவ்வாறு கையாளுவது, எவ்வாறு சிகிச்சை அளிப்பது முதலியவைப் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
மேலும், மருத்துவப் பயிற்சியாளர்கள், மருத்துவக் கடைக்காரர்கள், தொழிற்சாலை மேலாளர் உள்ளிட்டோர் கறுப்பு பூஞ்சை சம்பந்தமாக ஏதாவது மருந்துகள் வாங்கினால் அவர்களது விவரங்களை உடனடியாக அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் கரோனா நோயாளி குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு அவர்களுக்கு கறுப்பு பூஞ்சை பாதிக்கப்படுகிறதா என்பதை அந்தந்த மருத்துவ நிர்வாகம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அப்படி யாராவது கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டால் அவர்களது விவரத்தை சுகாதாரத்துறை அலுவலர்கள் சேகரித்து வைக்கவேண்டும். கறுப்பு பூஞ்சைப் பற்றி மக்களுக்கு சுகாதாரத்துறை அலுவலர்கள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் சுகாதாரத் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.