சென்னை: கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே அக். 23ஆம் தேதி அதிகாலையில் கார் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. இதில் உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த ஜமேஷா முபின்(28), என்ற பொறியியல் பட்டதாரி பலியானார்.
இதையடுத்து, இந்த வழக்கை தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கத்தொடங்கினர். விசாரணையில் ஜமேஷா வீட்டிலிருந்து 75 கிலோ வெடி மருந்து மற்றும் ஐ.எஸ். இயக்கம் தொடர்பான குறிப்புகள் கைப்பற்றப்பட்டன.
இந்த வழக்குத் தொடர்பாக முகமது அசாருதீன்(23), அப்சர்கான்(28), முகமது தல்கா(25), முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில்(26), முகமது நவாஸ் இஸ்மாயில்(27) ஆகிய 6 பேரை தேசியப் புலனாய்வு சிறப்பு போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்கள் 6 பேரும் கோவை சிறையிலிருந்து நேற்று சென்னை புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில் 6 பேரையும் இன்று(நவ.8) காலை பூந்தமல்லியில் உள்ள தேசியப் புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். இந்த நிலையில் நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நீதிமன்றத்திற்குச்செல்லும் வாகனங்கள், நபர்கள் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், நீதிமன்றத்திற்குச் செல்பவர்களின் பெயர், விலாசம் உள்பட அனைத்து ஆவணங்களும் பரிசோதனை செய்த பிறகே நீதிமன்ற வளாகத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நீதிமன்ற வளாகம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் நீதிமன்ற வளாகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். நீதிமன்ற வளாகத்திற்குள் செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனைக்குப் பிறகே செல்ல அனுமதிக்கப்பட்டது.
பின்னர் 6 பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த போலீசார் சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு, நீதிபதி இளவழகன் முன்பு ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி ஆறு பேரையும் வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து 6 பேரையும் என்.ஐ.ஏ அலுவலர்கள் கோவை சிறையில் அடைக்க அழைத்துச்சென்றனர். இன்றைய தினம்(நவ.8) 6 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ அலுவலர்கள் மனு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போலீஸ் காவலில் விசாரிக்க மனு எதுவும் அளிக்கவில்லை. எனினும், வரும் 11ஆம் தேதி போலீஸ் காவலில் விசாரிக்க மனு அளிக்க முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
கோவை சிறையில் அடைத்தால் தான் இந்த வழக்கு சம்பந்தமான மேலும் விசாரணைக்கு உறுதுணையாக இருக்கும் என்ற காரணத்திற்காக மீண்டும் 6 பேரையும் கோவை சிறைக்கு என்.ஐ.ஏ அலுவலர்கள் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த பிறகு தான் இந்த சதி திட்டத்தின் முழுமையான காரணம் என்ன? இதில் தொடர்பு உடையவர்கள் யார்? என்பது குறித்த முழு விவரம் தெரியவரும் என என்.ஐ.ஏ அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:விழுப்புரத்தில் 26 சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம் - எஸ்பி ஸ்ரீநாதா உத்தரவு