தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 2, 2019, 11:56 PM IST

ETV Bharat / state

செலவைக் குறைக்க ”காக்னிசென்ட்” கையில் எடுத்த புதிய திட்டம்

சென்னை: அமெரிக்க பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான "காக்னிசென்ட்" (cognizant) சுமார் ஏழாயிரம் ஐடி ஊழியர்களை வேலையைவிட்டு நீக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

cognizant

’காக்னிசென்ட்’ நிறுவனத்தின் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான மூன்றாவது காலாண்டு செயல்பாடு குறித்து அண்மையில் பேசிய அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரயான் ஹம்ப்ரீஸ், "நிறுவனத்தின் வருங்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 12ஆயிரம் ஊழியர்கள் தற்போது பணியாற்றி வரும் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள்.

அவற்றில் 5 ஆயிரம்பேருக்கு மறுதிறன் பயிற்சி அளிக்கப்பட்டு மீண்டும் காக்னிசென்ட்டின் வேறுபிரிவில் பணியமர்த்தப்படுவார்கள்” என்று தெரிவித்திருந்தார்.

வேலையை இழக்கும் சூழலில் ஐடி ஊழியர்கள்

இந்த அறிவிப்பில் மீதமுள்ள 5ஆயிரம் முதல் 7ஆயிரம் பேரின் நிலை குறித்து தெளிவாக விளக்கப்படவில்லை. இதனால் அவர்கள் வேலையைவிட்டு நீக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் சுமார் 3லட்சம் ஊழியர்களைக் கொண்ட ”காக்னிசென்ட்” நிறுவனத்தில் அதிகளவில் இந்தியர்களே பணிபுரிகின்றனர். அதிலும் குறிப்பாக பெங்களூரூ மற்றும் தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனர்.

செலவைக்குறைக்க 'காக்னிசென்ட்' திட்டம்

தற்போது இந்த விவகாரத்தில் இந்தியர்களே அதிகளவில் பாதிக்கப்படுவர் என்று கூறப்படுகிறது. காக்னிசென்ட் நிறுவனம் பெரியளவில் நஷ்டத்தை சந்திக்காத சூழலில் தங்களது லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் மூத்த ஊழியர்களைப் பணியிலிருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கம் (யுனைட்) குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக பேசிய அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் அழகுநம்பி வெல்கின், "காக்னிசென்ட் ஃபிட் ஃபார் குரோத் எனும் திட்டத்தை வகுத்துள்ளது.

இதன்மூலம் 550மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 3 லட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாய்) சேமிக்க திட்டமிட்டுள்ளது. காக்னிசென்ட் நிறுவனம் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இந்திய மதிப்பில் சுமார் 5ஆயிரத்து 200கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சி சீராக உள்ளது. அதேபோல் அந்நிறுவனம் புதிதாக ஆட்களை வேலைக்கு எடுப்பதை நிறுத்தவில்லை.

அதிக ஊதியம்பெறும் நடுத்தர மற்றும் உயர்பிரிவு ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கி அதற்குப் பதிலாக குறைந்த ஊதியம்பெறும் ஊழியர்களை பணியில் அமர்த்துவதே காக்னிசென்ட்டின் நோக்கம். இதனைத் தடுத்து நிறுத்த இந்திய சட்டங்களில் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

ஐடி ஊழியர்கள்
"காக்னிசென்ட்" நிறுவனம் மீது குற்றச்சாட்டு

தொடர்ந்து பேசிய அவர், ஊழியர்களும் தங்களது உரிமைகளே அறியாமல் இருப்பதே இந்த பிரச்னைகளுக்கு முக்கிய காரணம். தங்களது உரிமைகளைப் பெறுவது எப்படி உள்ளிட்டவற்றை தொழில்நுட்பத்துறை ஊழியர்கள் தொழில் தகராறு சட்டங்களைப் படித்து தெரிந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி தேசிய சுகாதாரத் திட்ட ஊழியர்கள் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details