இதுபோன்று அதிகளவில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருதரப்பினர் இளநீர் வியாபாரிகள். கோடை காலத்தில் சாலை ஓரத்தில் இளநீர் விற்பனை சூடுபிடிக்கும். ஏராளமான மக்கள் தங்கள் தாகத்தை தணிக்க இளநீர் வாங்கிச் செல்வர்.
ஆனால் தற்போது சாலையோரம் இருக்கும் இளநீர் வியாபாரிகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளனர். பொதுவாக கோடை காலங்களில் நாள் ஒன்றுக்கு 300 இளநீருக்கு மேல் விற்பனையாகும் எனக் கூறும் அவர்கள், தற்போது 50 இளநீர் கூட விற்பனை ஆகவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
சென்னை கே.கே. நகர் பகுதியில் சாலை ஓரத்தில் கடை வைத்திருக்கும் பழனி நம்மிடம் பேசுகையில், "கோடைகாலத்தில்தான் இளநீர் அதிகம் விற்பனையாகும். தற்போது காவல் துறையினர் எங்களை கடையை அடைக்க கூறவில்லை. இங்கு கூட்டம் கூடாததால் பிரச்னை இல்லை. ஆனால் வியாபாரம் பெரிய அளவில் இல்லை. யாரும் இளநீர் குடிக்க தேடிவரவில்லை. இந்த வழியாக வந்து செல்லும் ஓன்றிரண்டு பேர் இளநீர் வாங்கி குடிக்கிறார்கள். ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வராததால் எங்களுக்கு வியாபாரம் இல்லை.
கோடையில் வாடும் இளநீர் வியாபாரிகள்: பசியின்றி உறங்குவதை உறுதி செய்க! மக்கள் வாங்காததால் ஏராளமான இளநீர் கெட்டுப்போய் விட்டது. இன்னும் சில காய்கள் விரைவில் கெட்டுப்போய்விடும். முன்பு நாள் ஒன்றுக்கு 300 இளநீருக்கு மேல் விற்பனையாகும். தற்போது 50 இளநீர் கூட விற்பனையாவதில்லை. இதனால் அன்றாடச் செலவுக்குக்கூட பணமில்லாமல் கடன் வாங்க வேண்டிய நிலையே உள்ளது" என்றார்.
அவரது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ள நேரத்திலும் பழனி பக்கத்து கடைக்காரருக்காகக் கவலைப்படுகிறார்.
"அருகேயிருந்த தர்ப்பூசணி கடைக்காரர் கடையை அடைத்துவிட்டார். வியாபாரமாகாததால் அவருக்கு ஐந்து டன் பழங்கள் கெட்டுப்போய்விட்டன. 80 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. எப்படி குடும்பத்தை நடத்தப்போகிறார் எனத் தெரியவில்லை" என்றார் கவலைதோய்ந்த குரலில்.
சென்னை கோடம்பாக்கம் அம்பேத்கர் சாலைச் சந்திப்பில் இளநீர் விற்றுக்கொண்டிருந்த மற்றொரு வியாபாரியிடம் பேசினோம்.
வழக்கமாகப் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் இந்தச் சாலை வெறிச்சோடிக் காணப்பட்டது. அதைப்போலவே அந்த வியாபாரியின் முகமும் இருந்தது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளதால் அவருக்கு விற்பனை பாதிப்படைந்துள்ளது. இதனால் அவரால் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை, மளிகைச் சாமான்கள் வாங்க முடியவில்லை, வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் வாங்க முடியவில்லை.
வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது என முதலமைச்சர் அறிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், ஆனால் இதனை எந்த வீட்டு உரிமையாளர்களும் பின்பற்றவில்லை என்றார். கோடையில் மக்களின் தாகத்தை தணிக்கும் இளநீர் வியாபாரிகள் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து குடும்பத்தை நடத்த முடியாமல் திணறி வருகின்றனர். பல்வேறு தொழிலில் ஈடுபட்டுவரும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு, அவர்களுக்கான நல வாரியம் மூலமாக ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
ஆனால் தமிழ்நாடு அரசு அறிவித்த எந்தத் தொழில் பிரிவிலும் இளநீர் வியாபாரிகள் வருவதில்லை. இவர்கள் மட்டுமல்ல இவர்களைப் போன்ற ஏராளமான அமைப்புசாரா தொழிலாளர்கள் உதவித்தொகை கிடைக்காமல் உள்ளனர். இவர்கள் அனைவரும் பசியின்றி உறங்குவதை உறுதி செய்வதோடு கண்ணியமான வாழ்க்கையை நடத்துவதற்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.
இதையும் படிங்க:சென்னையில் தள்ளுவண்டி கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை