தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஃபானி புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் - ஐஜி பரமேஷ்

சென்னை: ஃபானி புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக, இந்தியக் கடலோர காவல் படையின் கிழக்கு மண்டல ஐஜி பரமேஷ் தெரிவித்துள்ளார்.

இந்திய கடலோர காவல் படை கிழக்கு பிராந்திய ஐஜி பரமேஷ்

By

Published : May 2, 2019, 6:48 PM IST

வங்கக் கடலில் உருவாகி, அதிதீவிர புயலாக உருமாறியுள்ள ஃபானி புயல், ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தின் தெற்கு கடலோரப் பகுதியில் நாளை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஃபானி புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தாலும், கடலோர மாவட்டங்களில் லேசான காற்று வீசக்கூடும் எனவும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டிலும் ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, இந்தியக் கடலோர காவல் படையின் கிழக்கு மண்டல ஐஜி பரமேஷ் நமது ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "ஃபானி புயல் உருவான நாளிலிருந்து இந்திய கடலோர காவல்படை சார்பாக கப்பல்களும், விமானங்களும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. மீனவர்களுக்கும் கடற்படை கப்பல்களுக்கும் தேவையான எச்சரிக்கைகள், வானிலை குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது.

எங்களுடைய ரேடார் நிலையங்கள் மூலம் தமிழிலும் மற்ற பிராந்திய மொழிகளிலும் தேவையான முன்னெச்சரிக்கை அறிவிப்புகள், எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன .

ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மற்றும் விசாகபட்டணத்தில் நான்கு மீட்பு படைகள், நிவாரண பொருட்டுகளுடன் கூடிய இரண்டு கப்பல்கள் மற்றும் இரண்டு மீட்பு விமானங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடலோர காவல்படை அதிகாரிகள் சென்னை, விசாகப்பட்டினத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்” என்றார்.

தொடர்ந்து, இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி பேசிய அவர், இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து மன்னார் வளைகுடா, பாக் பே மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. 24 மணிநேரமும் கடலோர காவல்படையின் கப்பல் மற்றும் விமானங்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்" என கூறினார்.

இந்தியக் கடலோர காவல் படை கிழக்கு மாகாண ஐஜி பரமேஷ்

ABOUT THE AUTHOR

...view details