தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிலக்கரி முறைகேடு: TANGEDCO-வில் 10 பேர் மீது அமலாக்கத்துறை விசாரணை! - தமிழ்நாடு மின்சார வாரியம்

அதிமுக மற்றும் திமுக ஆட்சியில் நிலக்கரி போக்குவரத்து டெண்டரில் முறைகேட்டில் ஈடுபட்டதாக Tangedco பொறியாளர்கள் உட்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை துவங்கியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 27, 2023, 8:05 PM IST

சென்னை: கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் மின்சாரத்திற்காக நிலக்கரியை வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதில் போடப்பட்ட டெண்டரில் முறைகேடு நடந்திருப்பது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த மார்ச் மாதம் மூன்றாம் தேதி வழக்குப்பதிவு செய்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு அறப்போர் இயக்கம் சார்பில் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகாரில் தமிழ்நாட்டிற்குத் தேவையான நிலக்கரி சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, பின் தமிழ்நாடு துறைமுகங்களில் கடல் வழியாக கொண்டு வரப்படுகிறது. அதன் பின் அனல் மின் நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியம் மின் பகிர்மான கழகத்தின் முன்னாள் தலைமை பொறியாளர் பழனியப்பன், மற்றும் அதிகாரி மனோகரன், பொறியாளர் நரசிம்மன், பொறியாளர் ஸ்ரீநிவாச சங்கர் ஆகிய ஐந்து பேர் கொண்ட குழு டெண்டர் ஒதுக்கீடு செய்வதற்காக அரசால் நியமிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த அதிகாரிகள் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டு மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. சுமார் 1000 கோடி ரூபாய் அளவில் மோசடியில் ஈடுபட்டதாக கொடுக்கப்பட்ட புகாரை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை செய்தனர்.

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து தமிழ்நாடு துறைமுகங்களுக்கு கடல் வழியாக நிலக்கரியை எடுத்து வர 2011இல் இருந்து 2016ஆம் ஆண்டு வரை 1267 கோடி ரூபாய் செலவானதாக போலியான கணக்கு காட்டி டேன்ஜட்கோ நிறுவனத்தில் இழப்பீடு ஏற்படுத்தியுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து தான் டேன்ஜட்கோ தலைவர் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் விளக்கம் கேட்டு கடிதம் எழுதிய போது, இந்த கால கட்டத்தில் நிலக்கரி போக்குவரத்திற்கான செலவு 239 கோடி ரூபாய் மட்டுமே சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தால் செலுத்தப்பட்டது எனப் பதில் அளித்துள்ளது. ஆனால், அதிமுக ஆட்சியில் குறிப்பாக இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளே பணியில் இருந்ததால் அதை மறைத்துள்ளனர்.

முதல்கட்டமாக 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை கிடைக்கப்பெற்ற புகார்களின் அடிப்படையிலும் ஆவணங்களின் அடிப்படையில் 908 கோடி ரூபாய் அளவில் இழப்பீடு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த மெகா மோசடி தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் மூன்றாம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும் இந்த முறைகேடானது 2001ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை நடைபெற்றதையும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். இந்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத் துறையினர் விசாரணையைத் துவங்கி உள்ளனர். கடந்த மூன்று நாட்களாக இந்த ஊழலில் தொடர்புடைய டேன்ஜெட்கோ அதிகாரிகள் வீட்டிலும், சவுத் இந்தியா கார்ப்பரேஷன் மற்றும் வெஸ்டர்ன் எனர்ஜி நிறுவன நிர்வாகிகள் என பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.

குறிப்பாக 2001 முதல் 2019ஆம் ஆண்டு வரை tangedcoவில் தலைமை பொறியாளராக இருந்த பழனியப்பன் இயக்குநராக இருந்த செல்லப்பன், மற்றும் அதிகாரி மனோகரன் பொறியாளர் நரசிம்மன், பொறியாளர் ஸ்ரீனிவாச சங்கர் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் பழனியப்பன், என 10 பேர் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாகத் தெரிய வந்துள்ளது.

இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்திற்குச் சொந்தமான 360 கோடி ரூபாய் நிரந்தர வைப்பு நிதி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக செட்டிநாடு குழுமத்தைச் சேர்ந்த சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஏற்கனவே 2020ஆம் ஆண்டு வருமான வரி சோதனை நடத்தப்பட்டபோது 700 கோடி ரூபாய்க்கு மேல் வருமானத்தைக் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சம்பாதித்த பணத்தை சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் செய்து வெளிநாடுகளில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் குவிக்கப்பட்ட சொத்துகள் குறித்து அமலாக்கத்துறை விரிவான விசாரணை நடத்தி வருகிறது. இவ்வாறு மோசடி செய்த பணம் யாருக்கெல்லாம் சென்றுள்ளது என்பது குறித்த வங்கிப் பணபரிவர்த்தனைகளையும் ஆய்வு செய்து, அதில் தொடர்புடைய நபர்கள், மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: CSK vs RR: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்!

ABOUT THE AUTHOR

...view details