சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமான தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர் ஆகிய பகுதிகளில் 6 புதிய நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இது அப்பகுதிகளில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று(ஏப்ரல் 5) சட்டப்பேரவை கூட்டத்தில் நிலக்கரி சுரங்கம் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நானும் டெல்டா காரன் தான், இந்த திட்டத்தை இங்கே வருவதற்கு அனுமதிக்க மாட்டேன்" எனப் பதிலளித்திருந்தார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை, "தஞ்சை டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கும், மீத்தேன் எடுப்பதற்கும் ஒன்றிய அரசு தன்னுடைய கோர முகத்தைத் தமிழ்நாட்டின் மீது திருப்பி இருக்கிறது. தமிழ்நாடு அரசைக் கலந்து ஆலோசிக்காமல், கலந்துரையாடல் செய்யாமல் தன்னிச்சையாக ஒன்றிய அரசு விவசாய ஜனநாயக விரோதப் போக்கை வெளிப்படுத்தி இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு புதுடெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாஜக அரசுக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் 700 பேர் உயிர் இழந்துள்ளனர். அதை தொடர்ந்து புதிய வேளாண்மை திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது. ஒன்றிய அரசு தனது கோர முகத்தைத் தமிழ்நாட்டின் மீது திருப்பி இருக்கிறது. இதைக் காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது.